2023ஆம் ஆண்டை வரவேற்க நாம் தயாராகிவிட்ட நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான நினைவுகளை அசைபோட்டபடிதான் இருக்கிறோம். அணிவகுப்பு ஊர்வல விவகாரம் தொடங்கி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது வரை 2022 ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்துத் தருகிறோம்.
ஜனவரி 4 : அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2,000 மினி கிளினிக்குகள் மூடப்பட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மூடப்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது. ஆனால், தற்காலிக இடங்களில் அமைக்கப்பட்டதால் அது மூடப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜனவரி 5: 2022ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. நீட் தேர்வு தேவையில்லை, இரு மொழிக் கொள்கையில் உறுதி, ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார் உள்ளிட்ட கருத்துகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தன.
* ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். 20 நாட்கள் அவரை தேடிய தனிப்படை காவல் துறையினர், கர்நாடக மாநிலம் ஹசனில் நடுரோட்டில் காரை மறித்து கைது செய்தனர்.
ஜனவரி 11; மதுரையில் ரூ. 114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நூலகத்துக்கு காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஜனவரி 17 ; டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழ்நாடு எம்.பி.க்கள், நீட் விலக்கு கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தை அவரிடம் சமர்பித்தனர். முன்னதாக அமித் ஷா தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என எம்.பி.க்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
ஜனவரி 19 : அரியலூர் மாணவி லாவண்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் அவரை மதம் மாற சொன்னதே தற்கொலைக்கு காரணம் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்ட இது சர்ச்சையானது. பள்ளியில் மதமாற்ற பிரச்சாரம் நடைபெறவில்லை என மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜனவரி 20 ; பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியதாகவும் அவர் விமர்சித்தார்.
* சொத்து குவிப்பு வழக்கில் தர்மபுரியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், 6.50 கிலோ தங்கம், ரூ.21 கோடி வரை ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திமுகவின் ஊழலை மறைக்கவே சோதனை நடத்தப்பட்டதாக கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டினார்.
ஜனவரி 26; டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டன. பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு கூறியது. இதனையடுத்து, சென்னையில் நடந்த குடியரசுத் தின விழாவில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. அதுமட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களுக்கு இந்த ஊர்திகள் அனுப்பப்பட்டன.
ஜனவரி 28: திருவொற்றியூரில் சாலை போடும் பணியின்போது அங்கு சென்ற எம்.எல்.ஏ கே.பி.சங்கர், மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamilnadu, YearEnder 2022