ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேர் விடுதலை முதல் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதல் வரை 2022 நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்.
நவம்பர் 11; ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதற்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.
* திண்டுக்கல் காந்தி கிராமத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
நவம்பர் 15; சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். மோதலுக்கு காரணம் ரூபி மனோகர் என குற்றம்சாட்டப்பட்டு அவர் நீக்கப்பட்ட நிலையில், மேலிடம் தலையிட்டு அவரது நீக்கத்தை ரத்து செய்தது.
நவம்பர் 22; பாஜகவில் இருந்து காயத்திரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கம் செய்யப்பட்டார். பாஜகவின் டெய்சி - சூர்யா சிவா பேசிய ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதனை வெளியிட்டதுதான் காயத்திரி ரகுராம் நீக்கத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது. அத்துடன், சூர்யா சிவா கட்சி நிகழ்வுகளில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், அவர் கட்சியில் இருந்து வெளியேறினார்.
நவம்பர் 23; குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது குற்றப்பத்திரிகையை சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
நவம்பர் 25; மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம், அதனை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
நவம்பர் 27; ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதியானது. நிலுவையில் இருக்கும் நிரந்தர தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆ.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், மீண்டும் எந்தவித தடையுமின்றி ஆன்லைன் சூதாட்டம் நடைபெறும் சூழல் உண்டானது.
நவம்பர் 29; ஆளுநரை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் தமிழ்நாடு வந்திருந்தபோது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு, தனது பணியிலிருந்து தவறியிருக்கிறது என்று புகாரளித்தார்.
நவம்பர் 30; பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, பாதுகாப்புஏற்பாடுகளில் எவ்வித குளறுபடியும் ஏற்படவில்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்தார். மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவுக்கு தரமாக உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.