தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச தடைக்கு பாஜக எதிர்ப்பு முதல் அன்புமணி பாமக தலைவரானது வரை 2022 மே மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
மே 1; சென்னை - மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தரப்பு, விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள் என விமர்சனம் செய்தது.
மே 2; தருமபுரம் ஆதின பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்ல மயிலாடுதுறை சப் - கலெக்டர் தடை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மே 7ஆம் தேதி தடை நீக்கப்பட்ட நிலையில், பட்டின பிரவேச விழாவில் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்பட பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மே 3; மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை உண்டானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் சிறப்பாக பணியாற்றக்கூடியவர் என பல தரப்பில் இருந்து ஆதரவு பெருகியதை அடுத்து நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
மே 7 ; திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகள் சூர்யா சிவா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
மே 10; எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தரை ஆளுநருக்கு பதிலாக அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
மே 18; ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். தனது தேனி மக்களவைத் தொகுதி கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார். இது அதிமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மே 28; சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.
* பாமக மாநிலத் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 முதல் 2022 வரை தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணி, கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2026 தேர்தலில் பாமக ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் தங்கள் இலக்கு எனக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், பாமக நிர்வாகிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.