அதிமுகவின் அரசியல் பயணத்தில் மீண்டும் ஒரு பிளவை சந்தித்தது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு அணிகளாக பிரிந்தனர். அது முதல் மாநிலங்களவைத் தேர்தல் வரை 2022 ஜூன் மாதம் தமிழ்நாடு அரசியலில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்.
ஜூன் 3; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் முதல்முறையாக அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
* மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் போட்டியிட்டனர். அனைவரும் போட்டியின்றி தேர்வாகினர். அதிமுக தரப்பில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக கடைசி வரை இழுபறி நீடித்த நிலையில், இறுதியாக ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மருக்கு சீட் வழங்கப்பட்டது.
ஜூன் 7; அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படும். அவை அங்கன்வாடி மையங்களாக செயல்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இதற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து,அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என அரசு அறிவித்தது.
ஜூன் 14; ஜூலை 23ம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒற்றைத் தலைமை குறித்து முழக்கம் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜெயக்குமார் பேட்டி அளித்ததால் விவரம் பூதாகரமானது. இதுவே அதிமுக மீண்டும் இரு அணிகளாக பிரிய அடித்தளமிட்டது.
ஜூன் 15; பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக எர்ணாவூர் நாராயணன் நியமனம் செய்யப்பட்டார். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக விலகினார். பின்னர், சமத்துவ மக்கள் கழகத்தை ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி அமைத்தார். இந்த நிலையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
ஜூன் 16; ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், “எந்த காரணத்திற்காகவும் கட்சி உடையக்கூடாது, பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்” என்று அறிவித்தார். எனினும், திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என இபிஎஸ் தரப்பு அறிவித்தது.
ஜூன் 23; அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. பொதுக்குழு நடத்தலாம். ஆனால், ஏற்கெனவே முன்மொழியப்பட்ட தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று உயர் நீதிமன்றம் அதிகாலையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
* அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டவுடன் எழுந்த அமைச்சர் சி.வி.சண்முகம், “பொதுக்குழுவின் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்” என ஆவேசமாக அறிவித்தார். ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆவேசமாக முழக்கமிட்டனர்.
ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதாலும் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வர மீண்டும் அதிமுக பொதுக்குழு ஜூலை 11 கூடும் என அறிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, DMK, TamilNadu Politics, YearEnder 2022