இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது முதல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது என 2022 ஜூலை மாதம் தமிழ்நாடு அரசியலில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை பார்ப்போம்.
ஜூலை 1 : பினாமி சட்டத்தின் கீழ் இதுவரையில் சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.2,215 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
ஜூலை 6 : இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்து மத்திய அரசு அறிவித்து. ஜூலை 25ஆம் தேதி பதவியேற்ற இளையராஜா, கடவுளின் பெயரால் ஆணையிட்டு எனக் கூறி தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்த சமயத்தில் அம்பேத்கர் - மோடி ஒப்பீடுக்காக இளையராஜாவுக்கு கிடைத்ததுதான் எம்.பி பதவி என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.
ஜூலை 11; பரபரப்புடன் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வாகினர். ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
* பொதுக்குழு நடந்த அதே நேரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அங்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினருக்கு கடும் மோதல் ஏற்பட்டு கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் ஓபிஎஸ் தரப்பு எடுத்துச் சென்றது. தன்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை எனக் கூறி ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.
ஜூலை 13; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக வெடிக்க, பள்ளியில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டு, வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. உளவுத் துறை தோல்வியால்தான் கலவரம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
ஜூலை 18; தமிழ்நாட்டில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு 100 யூனிட்டிற்கும் அதிகமான பயன்பாட்டிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்தின. வழக்குகளும் தொடரப்பட்டன.
ஜூலை 21; இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 21ஆம் தேதி நடைபெற்றது. பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு திமுக கூட்டணி கட்சிகளும் வாக்களித்தன. திமுக கூட்டணியில் ஒரு உறுப்பினர் போட்ட வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
ஜூலை 22; சென்னை மெரினா கடற்கரை அருகில் கருணாநிதிக்கு 137 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
ஜூலை 23; குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ கடந்த சில ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
ஜூலை 28; செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை என பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பிரதமர் மோடியின் புகைப்படங்களை செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜகவினர் ஒட்டினர். இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பிரதமர் படத்தை மைபூசி அழித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. பிரதமர் படம் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.