நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை 2022 பிப்ரவரியில் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய சம்பவங்களை பார்க்கலாம்.
பிப்ரவரி 3; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலனுக்கு இந்த மசோதா எதிரானது எனவும் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 8 ; நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது அரசியல் சாசனதின் படி சரியானது அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 10 ; சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கியது. இதுதொடர்பாக ரவுடி கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக இருப்பதால் பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
பிப்ரவரி 19 ; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 61 சதவிகித வாக்குகள் பதிவான இத்தேர்தலில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில பிரபலங்கள் வாக்களிக்கவில்லை.
பிப்ரவரி 21 ; நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட்டதாக கூறி திமுக தொண்டர் நரேஷ் குமார் என்பவரை சட்டையை கழற்றி தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் இரவு நேரத்தில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
பிப்ரவரி 22; தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தலில் திமுக 43 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி வென்றது.
பிப்ரவரி 28; உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். உடல் தளர்ந்திருக்கும் அவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. விஜயகாந்த் நலமாகவே இருக்கிறார் என தேமுதிக தரப்பு விளக்கம் அளித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.