Yaas Cyclone | வங்கக்கடலில் இன்று உருவாகிறது யாஸ் புயல்.. சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை

யாஸ் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

  • Share this:
    கிழக்கு-மத்திய வங்கக் கடலில் இரு தினங்களுக்கு முன்பாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்துள்ள நிலையில், இன்று மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாஸ் என பெயரிடப்பட உள்ள இந்த புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், நாளை மறுநாள் கரையை கடக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இதனால் கடற்கரையோர பகுதிகளில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 20 அடி உயரம் வரை அலைகள் எழக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புயல் சின்னம் காரணமாக சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது

    இதனிடையே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

    மேலும், புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில், கொரோனா தொற்றாளர்களுக்கு, சிகிச்சை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும், பிரதமர் அறிவுறுத்தினார். இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... கொரோனாவில் லேசான தொற்றுக்கும், கடும் பாதிப்புக்கும் உள்ள அறிகுறிகள்

    தமிழக கடலோர மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால். அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: