ஜெய் பீம் படம் குறித்தும், அதற்கு சில அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள் எழுப்பி வரும் எதிர்ப்பு குறித்தும் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஜெய்பீம் திரைப்படத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட அந்த அறிக்கையில், ‘வணக்கம். சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து வெளியான ஜெய் பீம் திரைப்படம், தமிழக மக்களின் பரவலான ஏற்பைப் பெற்று மிகப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்த் திரை உலகின் நட்சத்திர நடிகரான சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வு, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் துயர் சூழ்ந்த வாழ்வு ஆகியவை பற்றியது ஜெய் பீம் திரைப்படம்.
சமூக நீதி பற்றிய இந்த ஜெய் பீம் திரைப்படம், தமது சாதிக்கு எதிரானது எனத் தமிழகத்தில் உள்ள ஒரு சாரார், இந்தப் படத்திற்கும், இதன் இயக்குனர் த.செ. ஞானவேலுக்கு, ஜெய் பீம் படத்தைத் தயாரித்து நடித்த நடிகர் சூர்யாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள், ஒரு சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்பே ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த. செ. ஞானவேல், தாமாகவே முன்வந்து ஆட்சேபத்திற்கு உரியது எனச் சொல்லப்படுகிற குறியீட்டுப் பிம்பத்தை அகற்றி இருக்கிறார்.
இதற்குப் பின்னும் ஜெய் பீம் படக் கலைஞர்கள், அவர்தம் குடும்பத்தினர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள், பொது ஊடகங்களில் தொடர்ந்து பேசியும், நிர்பந்தித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்கள்.
வன்முறையான அழுத்தங்கள் தருவதன் மூலம் கலைஞர்களைப் பணியைச் செய்வது என்பது, எதிர்காலத்தில் இனி எந்தக் கலைஞரையும் சுதந்திரமாகப் படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதினின்றும் முடக்கி விடும் ஆபத்துக் கொண்டது என நாங்கள் கருதுகிறோம்.
இத்தகைய போக்கு சாதி மத பேதங்கள் கடந்த பொதுச் சமூகத்தின் சொத்தான கலைஞர்களின் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல, குடிமைச் சமூக உரிமைகளுக்கே எதிரானது எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தவிரவும் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை வலியுறுத்தி நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளன என்பதையும் இத்தருணத்தில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழகத்தின் சமூகநீதிக்கும், சமூக அமைதிக்கும் எதிரான வன்முறையைத் தூண்டும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைச் சனநாயக இயக்கத்தினர், மனித உரிமையாளர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பெண்நிலைவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்களான நாங்கள் கண்டனம் செய்கிறோம்.
நீதியான, சமத்துவமான, அமைதியான தமிழகத்தை விழைகிற அனைவரும் இத்தகைய வன்முறைக்கு எதிராக, எம்முடன் இணைந்து சனநாயகக் கடமையாற்ற வருமாறு கனிவுடன் அழைக்கிறோம். நன்றி.
மேலும் படிக்க - பிரியங்கா எனக்கு ஃப்ரெண்டே கிடையாது - சீறும் தாமரைச்செல்வி
வசந்தி தேவி (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ), எஸ்.வி.ராஜதுரை (மார்க்சிய , பெரியாரிய ஆய்வாளர்), பெருமாள் முருகன் (எழுத்தாளர்), ச.தமிழ்ச்செல்வன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), சொக்கலிங்கம் (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), கு.ராமகிருஷ்ணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்) இரா.அதியமான் (ஆதித்தமிழர் பேரவை), தியாகு (தமிழ் தேச விடுதலை இயக்கம்), ப.பா.மோகன் (மூத்த வழக்குரைஞர்), இந்திரன் (எழுத்தாளர்) உள்பட நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.