Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு- லுலு மாலின் சிறப்பம்சங்கள் என்ன?

தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு- லுலு மாலின் சிறப்பம்சங்கள் என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள லுலு நிறுவனத்தின் சிறப்பு என்ன? மற்ற மாலுக்கும் லுலு மாலுக்கும் என்ன வித்தியாசம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 

  ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லுலு நிறுவனம், தமிழகத்தில் 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.  அதன்படி, இந்த வருட இறுதியில், கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் தன்னுடைய முதல் ஹைபர் மார்க்கெட்டை தொடங்கவும், 2024ம் ஆண்டில் சென்னையில் புதிய ஷாப்பிங் மாலை கொண்டு வரவும் லுலு குழுமம் திட்டமிட்டுள்ளது.

  சர்வதேச அளவில், சூப்பர் மார்க்கெட்டுகள் சாமானிய மக்களை சென்றடைய தொடங்கிய காலகட்டத்தில், பிரான்ஸ் நாட்டின் Carrefour நிறுவனம் அரபு நாடுகளில் காலடி எடுத்து வைத்தது. இந்த நிறுவன தொடங்கியதால் ஏற்பட்ட மாற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் உணர்ந்த லுலு நிறுவனம், 1995ல் தன்னுடைய முதல் சூப்பர் மார்க்கெட்டை அபுதாபியில் தொடங்கியது.

  வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மலிவு விலையில் வழங்கியதன் மூலம் அப்பகுதியில் சில்லறை வணிக சூழ்நிலை மாறத் தொடங்கியது. பின்னர், அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் லுலு சூப்பர்மார்க்கெட் கடைகள் திறக்கப்பட்டன.

  அடுத்தகட்டமாக மளிகைப் பொருட்கள் தொடங்கி எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் 2000 ஆம் ஆண்டில், முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட் ஸ்டோர் துபாயில் திறக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், ஐக்கிய அரபு நாடுகளை தவிர்த்து, அமெரிக்கா, ஸ்பெயின், தென் ஆப்ரிகா, சீனா, இந்தோனேசியா, மலேசியா என உலக அளவில் 22 நாடுகளில் சுமார் 230 மால்களை கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் மொத்தம் 57,000-க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 56,500 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

  ஏற்கனவே இந்தியாவில், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் மால்களை தொடங்கியுள்ள இந்த நிறுவனம் தற்போது, தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் கோவையை குறி வைத்து வணிகத்தில் இறங்க உள்ளது. 2013ம் ஆண்டு கொச்சியில் தொடங்கப்பட்ட லுலு மால் இந்தியாவின் மிகப்பெரிய மால்களில் ஒன்றாக உள்ளது.

  அதை தொடர்ந்து 2021ல் திருவனந்தபுரத்திலும் தொடங்கப்பட்ட நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஷாப்பிங் மால் அமைக்க 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதேபோன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சர்வதேச மாநாட்டு மையம், ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் வணிக வளாகம் அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

  இந்தியாவை பொறுத்தவரை லுலு நிறுவனத்தின் முதலீடுகள் பெரும்பாலும், கேரளாவை சார்ந்து உள்ள நிலையில், இந்நிறுவனம், சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என தனது வணிகத்தை தீவிரமாக விரிவுபடுத்தத் தொடங்கி உள்ளது. பொதுவாக லுலு மாலில் அனைத்து வகை சார்ந்த கடைகளும், அனைத்து ரகம் சார்ந்த கடைகளும் இருக்கும் என்றாலும், மற்ற மாலுக்கும் இந்த லுலு மாலுக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உண்டு.

  மருத்துவர்கள் ஹிபோகிரடிக் உறுதிமொழியே எடுத்துக் கொள்வர் - மத்திய அரசு உறுதி

  இந்த லுலு மால் என்பது ஒரு குட்டி துபாய். இங்கு துபாயில் கிடைக்கும் பொருட்களை எளிதாக கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சமாக உள்ளது. வணிக வளாகம் தவிர்த்து, உணவு பதப்படுத்தும் ஆலைகள், மொத்த விநியோகம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் லுலு குழுமம் வலுவாக காலூன்றியுள்ளது.
  Published by:Karthick S
  First published:

  அடுத்த செய்தி