யார் எதிர்கட்சித் தலைவர் - ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாயிடையே கடும் வாக்குவாதம்

ஓபிஎஸ்- இபிஎஸ்

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 185 இடங்களில் போட்டியிட்டு 65 தொகுதிகளில் நேரடியாகவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த பூவை ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்றதை அடுத்து மொத்தமாக 66 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மாலை நான்கு முப்பது மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது. நான்கு மணி நேரத்துக்கு மேலாக மூத்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

  நான்கு மணி நேர ஆலோசனையில் இருதரப்பிலும் எந்த முடிவும் எட்டப்படாமல் தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து முடிவு எட்டப்படாமல் திங்கட்கிழமை மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் கூடி எதிர்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை வரவேற்கும் விதமாக அவர்களுடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அப்போது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எனவும் இதற்கு மேலும் விட்டுக் கொடுக்க கூடாது எனவும் கோஷங்களை எழுப்பினர்.

  எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவரால் தான் இந்த அளவிற்கு தொகுதிகளை வெற்றி பெற முடிந்தது எனவும் கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டி மாறி மாறி இரு தரப்பிலும் போட்டி போட்டு கோஷங்களை எழுப்பினர்.

  தொண்டர்கள் மத்தியில் எழுந்த அதே கேள்விகளும் கோஷங்களும் தலைவர்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்டதால் முடிவு எட்டப்படாமல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற்றபோது, தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எப்படி விட்டுக் கொடுப்பது என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த, ஓ.பன்னீர் செல்வம், ‘நீங்கள் செலவு செய்தபணம் கட்சியினுடையதுதானே. வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்ததால்தான் தென்மாவட்டங்களில் வெற்றியை இழந்தோம்’ என்று காட்டமாக பதிலளித்தார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: