WOMENS SELF HELP GROUPS GET LOAN WAIVERS FROM COOPERATIVE BANKS AFTER DMK COMES TO POWER MK STALINS ASSURANCE ARU
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின் உறுதி!
மு.க.ஸ்டாலின்
காவிரி - வைகை- குண்டாறு திட்டத்தை 2008ம் ஆண்டே அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து விட்டதாக கூறிய அவர், இத்திட்டத்தை மீண்டும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், பொள்ளாச்சியில் பல்வேறு துறையில் சாதனை படைத்த இளைஞர்கள் பலருக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கி கவுரவித்தார். அத்துடன் 1330 திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்பித்த 6 வயது சிறுவன் பட்டீஸ்வரனுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இந்த தொகுதி பெண்கள் தங்களது ஊரின் பெயரை உச்சரிக்க வெட்கப்படும் அளவுக்கு இன்று பொள்ளாச்சி மாறிவிட்டதாக சாடினார். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டப்படும் என்றும் உறுதியளித்தார். சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்களை பெண்கள், வயதானவர்கள் என்று கூட பாராமல் காவல்துறையை ஏவி கைது செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மக்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கையே தனது மிகப்பெரிய சொத்து என்று பெருமிதம் தெரிவித்த ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
இன்னும் 3 மாதங்களில் மக்களின் அனைத்து கவலைகளையும் தீர்க்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிபிஎஸ்இ 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகத்தில் திருவள்ளுவருக்கு குடுமி வைத்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பிடித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம் பூசுவதற்கு பாஜக அரசு அனுமதிப்பதாக கூறிய ஸ்டாலின், அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஆரிய வித்தைகளை தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது என்றும், திமுக இதனை பொறுத்துக்கொள்ளாது என்றும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரசார நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளான தெற்கு ரயில்வே, அஞ்சல்துறை, வருமானவரி உள்ளிட்ட பணிகளில் 90 சதவீதம் பேர் வடமாநிலத்தவர்கள் எனவும், தமிழக மாணவர்கள் நலனில் அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை எனவும் சாடினார். மேலும் காவிரி - வைகை- குண்டாறு திட்டத்தை 2008ம் ஆண்டே அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து விட்டதாக கூறிய அவர், இத்திட்டத்தை மீண்டும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒரே சாதனை தமிழகத்தின் கடன் தொகையை 5 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் எனவும் மு.க.ஸ்டாலின் சாடினார்.