Home /News /tamil-nadu /

வட்டி கட்டச் சொல்லி சிறிய நிதி நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன: நடவடிக்கை எடுக்கக் கோரும் பெண்கள்

வட்டி கட்டச் சொல்லி சிறிய நிதி நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன: நடவடிக்கை எடுக்கக் கோரும் பெண்கள்

பெண்கள் புகார்

பெண்கள் புகார்

அரசின் உத்தரவையும் மீறி சிறிய நிதி நிறுவனங்கள் மாதத் தவணைக் கட்டச் சொல்லி வற்புறுத்துவதாக புதுக்கோட்டையில் சுய உதவிக் குழு பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பலரும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஐந்தாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தாலும் இன்னும் பொது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. மேலும் கொரோனாவின் தாக்கமும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு சுய உதவிக் குழுவில் வாங்கிய கடன், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன கடன் உள்ளிட்டவற்றை மூன்று மாத காலத்திற்கு வசூல் செய்யக்கூடாது. ஆகஸ்ட் 31 வரை கடன் பெற்ற யாரிடமும் பணம் கேட்க கூடாது என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சூரிய டே, எக்விடாஸ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களில் அரசு அறிவித்த அறிவிப்பையும் மீறி மாதத் தவணையை கட்ட சொல்லி பெண்களை வற்புறுத்தி வருவதாகவும் மேலும் மூன்று மாத காலத்துக்கும் சேர்த்து வட்டியையும் கட்ட சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வருவதால் செய்வதறியாமல் சுய உதவிக்குழு பெண்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுய உதவி குழு கடன்களை தனியார் நிதி நிறுவனங்கள் அரசின் அறிவிப்பையும் மீறி அசலுடன் வட்டியையும் கேட்டு மிரட்டி வருவதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தீர்வுகாண வேண்டும் என்று மனு கொடுத்திருந்தனர்.

ஆனால் அந்த மனுவிற்கு இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை அனைத்துக் கட்சி சார்பில் பூட்டு போடும் போராட்டம் என அறிவித்து புதுக்கோட்டை நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது கணேஷ் நகர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஆனால் சுய உதவிக்குழு பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் வட்டி கேட்டு டார்ச்சர் செய்பவர்கள் மீது இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சுய உதவிக்குழு பெண்கள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு உத்தரவால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடி வருகிறோம். இந்நிலையில் சுய உதவி குழுவில் நாங்கள் பெற்ற கடனை தமிழக அரசு மூன்று மாத காலத்திற்கு கட்ட வேண்டாம் என அறிவித்தும் சூர்யா டே போன்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களை மாதத்தவணைக் கேட்டு டார்ச்சர் செய்து வருவதாகவும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கடந்த இரண்டு மாதங்களுக்கு கட்டவேண்டிய தொகையுடன் சேர்த்து அதிக வட்டியும் கேட்டு வருவதாகவும் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு வரும் நாங்கள் எப்படி வட்டி கட்ட முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதுநாள் வரை எந்த ஒரு நிலுவை தொகையுமின்றி சரியான முறையில் வாங்கிய கடனை செலுத்தி வந்தோம்.

தற்போது ஊரடங்கு போடப்பட்டதால் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து கடனை கட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அரசு அறிவிப்பையும் மீறி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தங்களை தொடர்ந்து அசலுடன் வட்டியையும் கேட்டு டார்ச்சர் செய்து வருகின்றனர். பணம் செலுத்தவில்லை என்றால் ஆதார், ரேஷன் கார்டுகளை முடக்கி விடுவோம் என்று கூறுகின்றனர். நாங்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வருகிறோம்.

இதுகுறித்து ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சுய உதவி குழுவில் வாங்கியுள்ள கடனை செலுத்த மேலும் இரண்டு மாத காலம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் வட்டி செலுத்த கூறும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் சுய உதவி குழு பெண்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see:

Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி