11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பெண் நிரபராதி என விடுதலை... சாமானியப் பெண்ணின் சட்டப் போராட்டம்

மாதிரி படம்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தையை கொன்ற வழக்கில் 11 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சகுந்தலா (வயது 49). இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்பட 2 மகள்கள் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சகுந்தலா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.மறுநாள் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக கிடந்துள்ளது.  இதுகுறித்து செல்வராஜ் போலீசில் புகார் செய்தார். முதலில் சந்தேக மரணம் என போலீசார் விசாரித்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சகுந்தலா தான் குழந்தையை கிணற்றில் வீசியுள்ளார் என கொலை வழக்குபதிவு செய்து, போலீசார் சகுந்தலாவை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம்,  சகுந்தலா மீதான கொலை வழக்கில்,  அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  சகுந்தலா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மேல் முறையீடு செய்தார்.
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற சகுந்தலாவின்  மேல் முறையீட்டு  மனு மீதான இறுதி கட்ட விசாரணையின் போது,  அவரது வழக்குரைஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து மேல் முறையீட்டை  உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து  மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read : கும்பகோணம் அருகே மாட்டை காப்பாற்ற சென்ற சிறுவன் ரயில் மோதி உயிரிழந்த சோகம்!

கடந்த 2019ம் ஆண்டு  வழக்குரைஞர்கள் தாமஸ் பிராங்க்ளின் சீசர், கவுதன் ஆகியோர் மூலம், சகுந்தலாவின் மேல் முறையீடு மீதான  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு பிணை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். குறிப்பாக, வழக்குரைஞர் ஆஜராகவில்லை என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்வது உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இலவச சட்ட உதவி மையம் அல்லது கட்டணமின்றி வாதாட வரும் வழக்குரைஞர்களைக் கொண்டு, சட்ட உதவி வழங்க அனுமதித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், , சகுந்தலாவுக்கு பிணை அளித்து, அவர் தொடர்பான வழக்கை  உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் விசாரணை நடத்த கடந்த ஆண்டு ஜுலை 8ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் , சகுந்தலாவுக்கு ஆயுள்தண்டனை விதித்தது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சகுந்தலா தரப்பில் வழக்குரைஞர்கள் தாமஸ் பிராங்க்ளின் சீசர், சேது மகேந்திரன் ஆகியோர் ஆஜராகினர். இறுதியாக, நீதிபதிகள் பாரதிதாசன்,  நிஷாபானு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Also Read : Exclusive : கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி?

அப்போது சகுந்தலாவின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், சாட்சிகளின் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள், பிறழ் சாட்சியம், உடற்கூறாய்வு அறிக்கை உள்ளிட்டவற்றில் உள்ள குளறுபடி ஆகியவற்றை வாதங்களாக முன் வைத்தனர். குறிப்பாக, குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், உடற்கூறாய்வி அறிக்கையின்படி, இறந்த பிறகே குழந்தை கிணற்றில் விழுந்துள்ளது.

குழந்தையின் நுரையீரல், வயிற்றில் தண்ணீர் இல்லை. சாட்சியம் அளித்தவர்களும் முரணாக பதிவு செய்துள்ளனர் என்று வாதங்களை முன் வைத்தனர். எனவே,  சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை. சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இந்த வழக்கில் இருந்து முற்றிலும் வித்தியாசமான தகவலை அளிக்கிறது.

எனவே,குழந்தை இறந்த பின் தான் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. எனவே சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் மீதான தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வாதாடினர். விசாரணை முடிவில், சகுந்தலா மீதான வழக்கில்,சின்ன சின்ன சம்பவங்களை கூட சரியாக விசாரிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. சாட்சிகள் கூறிய தகவல்கள் அடிப்படையில் மனுதாரருக்கு தண்டனையை கீழமை நீதிமன்றம்  அளித்துள்ளது.

எனவே சகுந்தலாவுக்கு அளித்த ஆயுள்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால், அதைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் செய்யாத குற்றத்துக்காக 11 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அனுபவித்து வந்த சகுந்தலா,  18 ஆண்டுகளுக்குப் பிறகு  கொலை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சகுந்தாலா கூறுகையில், செய்யாத குற்றத்திற்காக 22 வயதில் சிறைக்கு சென்றேன். வக்கீல் வைத்து வாதாட வசதியில்லாமல் சிறையிலேயே இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்ற தாமஸ் பிராங்க்ளின் பெரும் உதவியாக இருந்தார். அவருக்கும் வக்கீல் கவுதமன், சேது மகேந்திரன் ஆகியோருக்கும் நன்றி. நான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்றதற்கு அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: