வயிற்றுக்குள் துணியை வைத்து சிசேரியன் செய்ததால் பெண் உயிரிழப்பு - உறவினர்கள் புகார்

வயிற்றுக்குள் துணியை வைத்து சிசேரியன் செய்ததால் பெண் உயிரிழப்பு - உறவினர்கள் புகார்
உயிரிழந்த பெண் பிரியா
  • Share this:
விருத்தாசலத்தில் பிரசவத்திற்கு பின் பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்ததால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

விருத்தாச்சலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கலர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி பிரியாவிற்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்து உள்ளது. பிரசவத்திற்கு 4 நாட்களாக சிகிச்சையிலிருந்த பிரியாவின் வயிறு வீக்கம் காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதை தொடர்நது அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரசவத்தின் போது அரசு மருத்துவர்கள் பிரியாவின் வயிற்றில் பழைய துணி மற்றும் பஞ்சுகள் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரியாவின் கணவர் ராஜ்குமார் கூறுகையில், “விருத்தசாலம் அரசு மருத்துவர்கள் அஜாக்கிரதையாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். என் மனைவிக்கு தீராத வலி இருப்பதை கூறிய போது அலட்சியமாக பதிலளித்தார்கள். என் மனைவியை மீட்டு ஜிப்மர் அனுமதியில் அனுமதித்த போது வயிற்றில் பழைய துணி இருந்ததாக கூறினார். அங்கும் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்துள்ளார்“ என்றார்.

பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுபோல வேறு ஏதேனும் சம்பவங்கள் நடைபெறக் கூடாது என வலியுறுத்தி பிரியாவின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்