வன்னியர்கள் இடஒதுக்கீடு விவகாரம்: அதிமுக - பாமக கூட்டணியில் சலனத்தை ஏற்படுத்துமா?

கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், ஜி.கே. மணி.

வன்னியர்கள் இடஒதுக்கீடு விவகாரம் எதிர்வரும் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணியில் எதிரொலிக்குமா என்பது பற்றி இரு கட்சிகளின் தலைவர்களும் விளக்கமளித்துள்ளனர்.

 • Share this:
  வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என பாமக அறிவித்துள்ள நிலையில், அனைத்து சமூகங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அரசு செயல்பட்டு வருவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இடஒதுக்கீடு விவகாரத்தில் பாமக அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி தொடர்பான முடிவை நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என்றும் கூறினார். இடஒதுக்கீடு போராட்டத்துக்கும், கூட்டணிக்கும் தொடர்பு இல்லை எனவும் ஜி.கே.மணி குறிப்பிட்டார்.

  இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அனைத்து சமூகங்களுக்கான உணர்வுக்கும் மதிப்பளித்து, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். சமூகம் சார்ந்த பிரச்னைக்கு ஆழமாக சிந்தித்து முடிவெடுத்தால்தான் தீர்வு காண முடியும் எனவும் முனுசாமி தெரிவித்தார்.

  Also read: கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் பாமக

  இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இடஒதுக்கீட்டை பொறுத்தவரை அரசு கவனமுடன் செயல்படுதாகவும், அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

  தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பானது மிகவும் நியாயமானது என்றும், அந்த பணி விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

  அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற வேண்டும் என்பதற்காகவே பாமக, வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்னெடுப்பதாக, மூத்த பத்திரிகையாளர் துரைகருணா கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் பாமக இதுபோன்ற கோரிக்கைகளை முன்னிறுத்துவது வழக்கமானதுதான் என்றும் துரைகருணா குறிப்பிட்டார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: