• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுமா என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் தினசரி மின் தேவை சுமார் 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இதில், 5 ஆயிரம் மெகாவாட் அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.  மின் உற்பத்திற்காக மேட்டூர், வட சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தற்பொழுது பெய்து வரும் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலக்கரி எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முதல் அலகில் ஒரு நாளுக்கும், இரண்டாவது அலகில் ஆறு நாட்களுக்கும் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 5 லட்சம் டன் நிலக்கரி விரைவில் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும், இந்த மாதம் அதிகமான நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலக்கரி இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டால் தனியாரிடம் மின்சாரத்தை வாங்கிக் கொள்ள முடியும் என்றும் இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

    சராசரியாக தற்போது 4.50 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் நிலையில், மின் தட்டுப்பாடு ஏற்படும்போது 11 ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் மின் கொள்முதல் செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்நிலையில், தலைமை செயலகத்தில் நிலக்கரி கையிருப்பு, மின்சார உற்பத்தி தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது, தமிழகத்தில் நாளொன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது.

    தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வரவு வருகிறது, அதன்படி 4 நாட்களுக்கான கையிருப்பாக 2 லட்சத்து 40 ஆயிரம் டன் நிலக்கரி உள்ளது. தனியார் அனல் மின் நிலையங்களிலிருந்து 2 ஆயிரத்து 830 மெகாவாட் பெறப்பட்டு வந்த நிலையில், நிலக்கரி வரத்து குறைவு போன்ற காரணங்களால், ஆயிரத்து 300 மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது. பற்றாக்குறையான 1500 மெகாவாட் மின்சாரத்தை ஈடுசெய்ய தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் அதிகபட்ச உற்பத்தித் திறனில் இயக்கப்பட்டு 3300 முதல் 3350 மெகாவாட் வரை மின்சாரம் பெறப்படுகிறது.

    அனல்மின் நிலையங்களில் 80% நிலக்கரி உள்நாட்டு உற்பத்தியாகவும், 20% மட்டுமே வெளிநாட்டு நிலக்கரி கலந்து எரியூட்டப்படுவதால், நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்த அமைச்சர்,  மத்திய தொகுப்பில் இருந்து நாள்தோறும் 3,500 முதல் 4,000 மெகா வாட் பெறப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: