அள்ளித்தரும் ஜல்லிக்கட்டு.. பரிசாக கார்‌ வாங்கியவர் இன்றும் கார்பெண்டர்.. அரசுப் பணியை அறிவிப்பாரா முதல்வர்?

அள்ளித்தரும் ஜல்லிக்கட்டு.. பரிசாக கார்‌ வாங்கியவர் இன்றும் கார்பெண்டர்.. அரசுப் பணியை அறிவிப்பாரா முதல்வர்?

ஜல்லிக்கட்டு போட்டிகள்: வெல்பவருக்கு வேலை நனவாகுமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அரசுப்பணி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஜல்லிக்கட்டு நேசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது‌.

  • Share this:
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு மழை பொழிவது அனைவரும் அறிந்ததே, ஆனால் பரிசு பெறுவோரின் வாழ்வாதாரம் என்னவோ பழைய நிலையில் தான் இருந்து வருகிறது. உலகில் கோடிகளில் புரளும் கிரிக்கெட் விளையாட்டில்  தொடர் நாயகன் விருதாக கார் பரிசு வழங்குவதை நாம் அறிந்திருப்போம். மதுரை மாவட்டத்தில் ஒரு குக் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கிரிக்கெட் போட்டிக்கு ஈடாக ஒன்றல்ல இரண்டு கார்கள் பரிசாக வழங்கப்படுவதெல்லாம் உலகில் வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத நிகழ்வு.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 14 முதல் முறையே ஜனவரி 16 வரை நடைபெற உள்ளது. 16-ஆம் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு கார்கள் பரிசாக வழங்கப்படுவது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. 2019-இல் நடந்த போட்டியில் அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார் சிறந்த மாடுபிடி வீரர் அதற்கான கார் பரிசு பெற்றார். 2020-இல் நடந்த போட்டியில் ராம்குமாரின் மூத்த சகோதரர் ரஞ்சித்குமார் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வாகி கார் பரிசு பெற்றார். ராம்குமார் ஆலை ஒன்றில் கூலித்தொழிலாளியாகவும், ரஞ்சித் குமார் கார்பென்டராகவும்தான் இன்றும் பணியாற்றி வருகிறார்கள். 2 கார்களை பெற்ற ஒரு குடும்பம் இன்றும் கூலி வேலை செய்து தங்கள் அன்றாட வாழ்வை கடத்தி வருகிறது‌. ஒரு காரை விற்ற அவர்கள், மற்றொரு காரை பயன்பாட்டுக்கு வைத்துள்ளனர். அந்தக் காரை நிறுத்துவதற்கு கூட இடமில்லை என்பதால் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கக் கூடிய தனது உறவினர் வீட்டில் அந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி


ரஞ்சித்குமாருக்கு பரிசாக கிடைத்த கார்
காருக்கு எரிபொருள் போட்டு தினசரி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு வசதி இல்லை. நண்பர்கள் ,உறவினர்கள் என எரிபொருள் நிரப்பி யார் வேண்டுமானாலும் காரை பயன்படுத்த அனுமதித்துள்ளனர்.

கார் வைத்திருப்பவர்களுக்கு இந்த நிலை என்றால் புல்லட், பைக், டிவி, பிர்ட்ஜ், கட்டில், பீரோ, தங்ககாசு என எண்ணற்ற பரிசுகளை வாங்கிக் குவித்த ஒவ்வொரு மாடுபிடி வீரர்கள் நிலையும் இதுதான். பரிசு அவர்களின் வாழ்வியலை மாற்றியதில்லை. ஆனால் பரிசை விட பங்கேற்க வேண்டும் என்பதுதான் அவர்களது வாழ்வியலாக உள்ளது. போட்டி நடைபெறும் அன்றைய நாள் மட்டுமே அவர்கள் கள வீரர்கள். மற்ற நாட்களில் மற்றவர்களைப் போலவே அவர்கள் இன்றும் கூலித்தொழிலாளர்கள். உயிரை பணயம் வைத்து நடைபெறும் இந்த வீர பாரம்பரிய விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அது ஒன்று மட்டுமே மாடுபிடி வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்பதால் அதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தமிழரின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை பெருமைப்படுத்துவதற்கு இதைவிட பெரிய அங்கீகாரத்தை யாரும் வழங்கிவிட முடியாது. எனவே ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் பரிசை வழங்கி விட்டு தியேட்டரில் படம் பார்ப்பதைப் போன்று கடந்து விடாமல் இம்முறை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அரசுப்பணி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஜல்லிக்கட்டு நேசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது‌.
Published by:Gunavathy
First published: