நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தனது தேர்தல் பணிகளை அகில இந்திய அளவில் மேற்கொள்ள தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தனது 70வது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதை முன்னிட்டு திமுக தென் சென்னை மாவட்ட சார்பாக பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எல்லா கட்சி தலைவர்களும் பெரும்பாலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்ற கருத்தையே வெளிப்படுத்தினர். பாருக் அப்துல்லா பேசிய போது யார் பிரதமர் வேட்பாளர் என்பது முக்கியமல்ல எல்லோரும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியும் அதே போன்ற ஒரு யோசனையில் தான் இருக்கிறது என்றும் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டின் நலனை காக்க வேண்டும் என்று பேசினார்.
இறுதியாக விழாவில் பேசிய திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிக முக்கியமான ஒன்று என்றும், 2009, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்ட பேரவை தேர்தல் ஆகியவை எல்லோரும் ஒன்றாக பயணித்ததே வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை சுட்டிக்காட்டி பேசினார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி நாடாளுமன்றத் தேர்தலில் கரை சேராது என்பதை ஆணித்தரமாக மிகவும் ஆக்ரோஷமாகவே வெளிப்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை வெளிப்படுத்தியதாகவும் தற்போது மீண்டும் வரக்கூடிய தேர்தலில் அதை சரியாக செயல்படுத்த வேண்டும் என்று கூறினார். இங்கே சொல்லப்பட்ட செய்தியை டெல்லிக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகளிடம் இது குறித்து பேச வேண்டும் என்பது அவரது பேச்சில் வெளிப்பட்டது.
முதலமைச்சரின் இந்த பேச்சு மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ், தேசிய அளவில் இருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அகில இந்திய அளவிலும், மாநிலத்திலும் கூட்டணி வைத்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், திரினாமுல் காங்கிரசுக்கும் இடையேயான மோதல் ஆண்டு கணக்கில் தொடர்ந்து வருகிறது. இப்படி மாநிலத்திற்கு மாநிலம் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத நிலையில் முதலமைச்சரின் இந்த பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. அடுத்த ஓராண்டில் இதை காங்கிரஸ் உடன் சேர்ந்து திமுக மேற்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, Chandrashekar Rao, CM MK Stalin, Congress, DMK, Lok Sabha Election, Mamta banerjee