டி.டி.வி.தினகரனுடன் தற்போதும் தொடர்பு; ஓ.பி.எஸ் குறித்த ரகசியங்களை வெளியிடுவேன் - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

டி.டி.வி.தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் - ஓபிஎஸ்

டி.டி.வி. தினகரனுடன் ஓ‌.பன்னீர்செல்வத்திற்கு தற்போது வரை தொடர்பு இருப்பதாக கூறும் தங்க தமிழ்செல்வன், ஓ.பி.எஸ் குறித்த ரசசியங்களை வெளியிடுவேன் என பேசினார்.

 • Share this:
  ஆண்டிபட்டி சட்டமன்றத் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக என்னை ராஜினாமா செய்யச் சொல்லியதற்கு நான் மறுத்திருந்திருந்தால் எனது நிலைமை என்னவாக இருந்திருக்கும்? ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்க தமிழ்ச்செல்வன் பதில். சசிகலா, தினகரனுடன் ஓ‌.பன்னீர்செல்வத்திற்கு தற்போது வரை தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு.

  தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் நேற்று  நடைபெற்ற கவன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2002ஆம் ஆண்டு ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்யச் சொல்லிக் கேட்ட போது அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தயங்கியதாகவும், அவரை ஒரு நாள் இரவு முழுவதும்  நான் உள்ளிட்டோர் பேசி சமாதானம் செய்தாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.

  Also read:   குடும்பத்தினருடன் கதறி அழுத பசவராஜ் பொம்மை.. கர்நாடக முதல்வரின் மறுபக்கம்..

  இது குறித்து திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்; தங்கதமிழ்செல்வன் நமது நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு மாதத்தில் வேறெந்த முதல்வர்களும் மேற்கொள்ளாத அளவில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததால் இன்றைக்கு தமிழகத்தில் கொரோனா நோய் முற்றிலும் ஒழிந்துள்ளது. ஆனால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி என்ற வரிசையில் பாஜகவிடம் மண்டியிட்டு தன்னையுடைய இயலாமையை காட்ட முடியாமல் இன்றைக்கு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தவறாகும்.

  அந்த ஆர்ப்பாட்டத்தில் என்னைப் பற்றி ஓ.பன்னீர்செல்வம் குறை சொன்னது முற்றிலும் தவறு. கடந்த 2002ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது அப்போதைய சபாநாயகராக இருந்த காளிமுத்துவையும், என்னையும் அழைத்த ஜெயலலிதா என்னை ராஜினாமா செய்யுமாறு கேட்ட போது எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார். மேலும் ராஜினாமா செய்யும் விஷயம் வேறு யாருக்கும் தெரியக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டதால், எனது மனைவி மற்றும் உறவினர்களுக்குக் கூட  அது தெரியாது.

  Also read:  சார்பட்டா பரம்பரையும் ஏற்காடும்.. குத்துசண்டை வீரர் டெர்ரி குறித்த எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்..!

  மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்த பிறகுதான் நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொன்ன போது நான் தயங்கியதாகவும், அதற்கு ஒரு நாள் முழுவதும் என்னை ஓ.பி.எஸ் சமாதானம் செய்ததாகவும் கூறியிருப்பது தவறு. அந்த நேரத்தில் ஜெயலலிதாவிற்கு ஓ.பிஎஸ் யார் என்றே தெரியாது எனக் கூறிய அவர், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்னை அழைத்த ஜெயலலிதா ராஜினாமா செய்யச் சொல்லி அதற்கு நான் மறுத்திருந்தால், எனது நிலைமை என்னவாகும் என எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

  மேலும் அப்போதைய இடைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதாவிற்கு டம்மி வேட்பாளாராக நிறுத்தப்பட்ட நானும் தான் அவருக்காக களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தேன். அதனைத் தொடர்ந்தும் அவருக்கு விசுவாசமாகத் தான் இருந்து வந்தேன்.  இதையடுத்து ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அதிமுகவில் ஊழல் நிறைந்து விட்டதால் தான் அங்கிருந்து விலகி வேறொரு கட்சிக்குப் போய் தற்போது திமுகவிற்கு வந்துள்ளேன். திமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கிய தலைவர் ஸ்டானின் சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்தார்.

  Also read:  மருந்தகங்களில் மட்டும் கொள்ளையடிப்பதை கொள்கையாக கொண்ட ‘மருந்தக கொள்ளையன்’! பகீர் பிண்ணனி...

  தேர்தலில் தோல்வியுற்றாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை களத்தில் நின்று அதிகாரிகளின் உதவியுடன் நிறைவேற்றி வருகின்றேன். அதனை பொறுத்துக் கொள்ள முடியாத போடி தொகுதி எம்.எல்ஏவான ஓ.பன்னீர்செல்வம் என் மீது அவதூறான செய்தியை பரப்பி வருகின்றார். இவ்வாறு என் மீது அவதூறு செய்திகளை ஓ.பி.எஸ் பரப்பி வந்தால் அவர் குறித்த ரகசியங்களை நான் தொடர்ந்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு உதாரணமாக ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே சசிகலாவின் புகைப்படத்தை தனது வீட்டில் வைத்திருந்து அவருக்கு விசுவாசமாக இருந்தவர் ஓ.பி.எஸ். எனவே தான் அவருடன் இணைந்துக் கொண்டு கட்சியை காட்டிக் கொடுப்பதற்கு தயராக இருக்கிறார்.

  மேலும் டி.டி.வி.தினகரனுடனும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொடர்பு இருக்கிறது. அதன் காரணமாகத் தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் கம்பம் ஆகிய 3 தொகுதிகளில் 15ஆயிரம் வாக்குகள் வாங்கிய அமமுக, போடி தொகுதியில் மட்டும் வெறும் 3ஆயிரம் வாக்குகளே பெற்றது. அந்த வாக்குகளினால் தான் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தால் வெற்றி பெற முடிந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது போன்ற இன்னும் பல தகவல்களை அடுத்தடுத்து தான் வெளியிட இருப்பதாகவும், தைரியம் இருந்தால் அதற்கெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கட்டும் எனத் தெரிவித்தார்.

  செய்தியாளர் பழனிக்குமார், தேனி
  Published by:Arun
  First published: