கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்க கோரி, வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்கறிஞர் சி.ராஜசேகர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இன்று இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கஜா புயல் போன்ற முந்தைய கால தேசிய பேரிடர்களின்போது நுகர்வோர்களின் கஷ்டங்களை அறிந்து மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோர்களிடமிருந்து மின் கட்டணம் வசூல் செய்யத் தடைவிதித்தால் அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து மாவட்டங்களுக்கும் ஜூன் 15ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன் தெரிவித்தார்.
Also see:
மேலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக திங்கள் கிழமை தெரிவிப்பதாகக் கூறினார்.
இதையடுத்து, வழக்கை திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.