திருச்சியில் 7-ம் தேதி பொதுக்கூட்டம்: 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின்

திருச்சியில் 7-ம் தேதி பொதுக்கூட்டம்: 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிப்பு  - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திருச்சியில் 7-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் இன்னும் 2 மாதத்தில் நடைபெறவிருக்கிறது.. நேற்றிலிருந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கை தயாராகிவருகிறது. 7-ம் தேதி திருச்சியில் மாநாடு போல சிறப்பான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியை கே.என்.நேரு மேற்கொண்டுள்ளார்.

7-ம் தேதி மாநாட்டில் தமிழகத்துக்கான அடுத்த பத்தாண்டுகளுக்கு தொலைநோக்கு திட்டத்தை வெளியிடப் போகிறது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது என்னுடைய பொறுப்பு. 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய இலக்கை அதில் வரையறுத்துள்ளேன். தமிழக மக்களுடன் நடத்திய சந்திப்பின் அடிப்படையில், கழக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்களுடன் நடத்திய கலந்துரையாடியதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைநோக்குத் திட்டங்களை 20 நாட்களுக்குள் இரண்டு கோடி மக்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்வதிலிருந்து பின்வாங்க மாட்டோம். அமித்ஷா, மோடி பேசுவது குறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை. ஊழல் செய்யும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கரங்களை மோடி உயர்த்தியுள்ளார். தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: