தமிழக பா.ஜ.க புதிய தலைவராகிறாரா அண்ணாமலை?

அண்ணாமலை

தமிழக பா.ஜ.கவின் அடுத்த தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, ஓரிரு மாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்த்தெடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ்க் கடவுள் முருகன் குறித்து கருப்பர் கூட்டம் இழிவாக பேசியதாக விமர்சனம் எழுந்தது.

    இதுதொடர்பாக வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையிலும், அந்த விவகாரத்தை தொடர்ந்து பிரச்னையாக எழுப்பினார் எல்.முருகன். கடவுள் முருகனை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக வேல் யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. அ.தி.மு.கவிடம் 20 தொகுதிகள் வாங்கி பா.ஜ.க போட்டியிட்டது. அதில், 4 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    இந்தநிலையில், பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்தார். அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், தற்போது மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். பா.ஜ.க விதிமுறைகளின்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர் பதவிகளில் இருப்பவர்கள் கட்சித் தலைவர் பதவிகளில் இருக்கக் கூடாது. அதன்படி, பா.ஜ.க தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்வார். அதனையடுத்து, தமிழக பா.ஜ.கவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பா.ஜ.கவைப் பொறுத்தவரை தற்போது 10 பேர் துணைத் தலைவர்களாக உள்ளனர்.

    அதில், அ.தி.மு.கவிலிருந்து பா.ஜ.கவுக்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் உள்ளது. அதேபோல, தி.மு.கவிலிருந்து பா.ஜ.கவுக்கு வந்த வி.பி.துரைசாமிக்கும் அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் உள்ளது. மற்ற துணைத் தலைவர்களான கே.எஸ்.நரேந்திரன், எம்.என்.ராஜா, கனகசபாபதி ஆகியோர் நீண்ட காலமாக பா.ஜ.கவில் இருந்துவருகின்றனர். இருப்பினும், ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பா.ஜ.கவில் இணைந்து தற்போது துணைத் தலைவராக இருக்கும் அண்ணாமலை தமிழக அளவில் அனைவரும் அறிந்த ஒருவராக இருக்கிறார்.

    கள அரசியல் அனுபவம் அவருக்கு பெரிதாக இல்லையென்றபோதும், சமூக அறிவியல் நல்ல அறிவைக் கொண்டவராக இருந்துவருகிறார். எனவே, அண்ணாமலைதான் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளிவருகின்றன. ஒருவேளை கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனித்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியிருப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனவே, அண்ணாமலையின் தலைமையின் கீழ் வரும் காலத்தில் பா.ஜ.க செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பா.ஜ.க தலைவர்கள் யார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது. ஒருவேளை அவர் பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றால் விரைவில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சவால் அவர் கண் முன்னே இருக்கின்றன.
    Published by:Karthick S
    First published: