தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை 14 மணிநேரத்துக்குப் பின் மீட்பு.. யானை தெம்பாக எழுந்து நின்றதால் மகிழ்ந்த மக்கள்..
தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை 14 மணிநேரத்துக்குப் பின் மீட்பு.. யானை தெம்பாக எழுந்து நின்றதால் மகிழ்ந்த மக்கள்..
மீட்கப்படும் யானை
தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்த குட்டியானை 16 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. மீட்புப் பணியின் போது யானைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே ஏலக்குண்டூர் என்ற கிராமத்தில் குட்டி பெண் யானை ஒன்று உணவு தேடி கிராமத்திற்குள் வந்தது. அப்போது தண்ணீர் குடிப்பதற்காக 50 அடி ஆழம் கொண்ட, திறந்த வெளி விவசாய கிணற்றில் நெருங்கியபோது தவறி விழுந்தது. தகவலறிந்து காலை 4.30 மணிக்கு வந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றின் முதல் 20 அடி மிகவும் அகலமாக இருந்தது. அதன்பின் உள்ள 30 அடி குறுகிய அகலம் கொண்டதாக இருந்ததால் யானையை மீட்க சிரமப்பட்டனர். கிணற்றில் இறங்கி யானையை கட்டி கிரேன் மூலம் தூக்குவது சவாலானதாக இருந்தது. கிணற்றில் விழுந்த யானை மிரட்சியுடன் இருந்ததால், மயக்க ஊசி செலுத்தி மீட்க முடிவு செய்தனர். முதல் மயக்க ஊசியில் யானை மயக்கம் அடையவில்லை. பின்னர் 2-வது முறையாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
பின்னர் கழுத்து மற்றும் கால்களில் கயிறு கட்டி கிரேன் மூலம் மேலே தூக்கினர். யானை 30 அடி குறுகிய இடத்தை கடந்து 13 மணிநேர போராட்டத்துக்குப் பின் மேலே வந்தபோது கயிறு நழுவி பக்கவாட்டில் விழுந்தது.
இதையடுத்து கிணற்றின் பக்கவாட்டில் விழுந்த யானையை மீண்டும் மீட்கும் பணி நடைபெற்றது. நான்கு கால்களிலும் கயிற்றை கட்டி கிரேன் மூலமாக மேலே இழுத்த வனத்துறையினர், இம்முறை பாதுகாப்பாக மீட்டனர். சுமார் 14 மணி நேரம் போராடி யானை வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட யானை சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து நின்றது. இதனால் வனத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
மீட்கப்பட்ட யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மீட்புப் பணியின் போது யானைக்கு எவ்வித காயமும்ஏற்பட வில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின் யானை மீட்கப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.