தம்பி மனைவிக்கு தொல்லை கொடுத்த கணவர்... கள்ளக்காதலர் உதவியுடன் தீர்த்துக்கட்டிய மனைவி...!

  • News18
  • Last Updated: February 9, 2020, 9:57 AM IST
  • Share this:
ஜோலார்பேட்டை அருகே தனது தம்பி மனைவிக்கு தொந்தரவு கொடுத்த கணவரை, கள்ளக் காதலர் உதவியுடன் தீர்த்துக்கட்டிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான ரமேஷ் குமார். இவர் சின்ன மூக்கனூர் ஊராட்சியில் குடிநீர் வழங்கும் டேங்க் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள மதுபானக் கடை பின்புறம் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது சம்பந்தமாக ரமேஷ் குமார் மனைவி நித்யா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை பொறுப்பு காவல் ஆய்வாளர் லோகநாதன் வழக்குப் பதிவு செய்து கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வந்தார்.


பல்வேறு கோணங்களில் விசாரித்தபோதும் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளி குறித்தும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், விசாரணையை ரமேஷ் குமாரின் குடும்பத்தின் பக்கம் போலீசார் திருப்பினர். ரமேஷ் குமார் மனைவி நித்யாவிடம் கணவர் கொலை குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதையடுத்து ரமேஷ் குமாரின் மனைவி நித்யா, மைத்துனர் அரவிந்தன், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ரமேஷ் குமார் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி ஊதாரித்தனமாகச் சுற்றி வந்துள்ளார். மேலும், நித்யாவின் தம்பி அரவிந்தனின் மனைவியிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் நித்யாவும் அவரின் தம்பி அரவிந்தனும் விரக்தியில் இருந்துள்ளனர். மேலும், வருமானம் இன்றியும் தவித்து வந்துள்ளனர்.இதையடுத்து, அரவிந்தன் நண்பரான திருப்பத்தூர் அனோரி பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி கணபதியிடம் அரவிந்தனும், நித்யாவும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

அப்போது கணபதிக்கும் நித்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. தன் கணவரின் கொடுமையையும், தம்பி மனைவிக்குக் கொடுக்கும் தொந்தரவு குறித்தும் கணபதியிடம் நித்யா கூறியுள்ளார். இதனால் பிரச்னையை முடிக்க ரமேஷ் குமாரை முடித்துவிடலாம் என கணபதி கூறியுள்ளார்.

இதையடுத்து நித்யா, அவரது கள்ளக்காதலர் கணபதி, தம்பி அரவிந்தன் மூன்று பேரும் சேர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் குமாருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்றுள்ளனர். ஆனால், மயங்கிக் கிடந்த ரமேஷ் குமாரை அக்கம்பக்கத்தினர் பார்த்து மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டனர்.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவர், கொஞ்சநாள் குடிக்காமல் இருந்துள்ளார். பின்னர் மீண்டும் குடித்துவிட்டு அரவிந்தன் மனைவியிடம் அத்துமீறியதுடன், நித்யாவையும் கொடுமைபடுத்தியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த நித்யா, அவருடைய தம்பி மற்றும் கணபதி உதவியுடன் ரமேஷ் குமாரைக் கொலை செய்ய மீண்டும் முயற்சித்துள்ளார். அதன்படி கடந்த 3ஆம் தேதி இரவு வீட்டிலிருந்த ரமேஷ் குமாரை அரவிந்தன் செல்போன் மூலமாக மது அருந்த கணபதி அழைத்துள்ளார்.

இதையடுத்து ரமேஷ் குமார் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி, பாட்டாளி நகர் அருகே உள்ள ஏரியில் அமர்ந்து ரமேஷ்குமார், கணபதி, அரவிந்தன் மூவரும் மது அருந்தியுள்ளனர். ரமேஷ்குமாருக்கு கொஞ்சம் போதை ஏறியதும், மதுவில் விஷம் கலந்து குடிக்க வைத்தார் கணபதி.

ஆனால், அதில் ரமேஷ்குமார் சாகவில்லை. இந்த முறையும் அவர் தப்பித்துவிடக் கூடாது என முடிவு செய்த கணபதி, ரமேஷ் குமார் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று தலைமறைவானது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, ரமேஷ் குமார் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி நித்யா, மைத்துனர் அரவிந்தனை கைது செய்த போலீசார், கொலை செய்த கணபதியைத் தேடி வருகின்றனர்.

தம்பி மனைவியிடம் தவறாக நடந்துகொண்ட கணவரை, கள்ளக் காதலர் உதவியுடன் மனைவியே கொலை செய்த சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்