இரண்டாவது திருமணத்துக்கு தயாரான கணவன்: அரிவாளால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்த மனைவி - தூத்துக்குடியில் பரபரப்பு

Youtube Video

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 2-வது திருமணம் செய்யப் போவதாக் கூறிய கணவனை இரவு முழுவதும் துாங்காமல் இருந்து வெட்டிக் கொலை செய்துள்ளார் மனைவி.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர்கள் 38 வயதான பிரபு - 30 வயதான உமா மகேஸ்வரி.  இந்த தம்பதிக்கு 7 வயதில் மகனும் 4 வயதில் மகளும் உள்ளனர். மில் தொழிலாளியான பிரபு மதுவுக்கு அடிமையானவர்; தினசரி மது அருந்தி விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். பிரபுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

  இதன் காரணமாகவும் தம்பதி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையில், தான் காதலிக்கும் பெண் கருவுற்றுள்ளதாகவும் அவரையே திருமணம் செய்யப் போவதாகவும் பிரபு கூறியுள்ளார்.

  அதிர்ச்சியடைந்த உமா மகேஸ்வரி தன்னைக் கைவிட்டு விட வேண்டாம் எனவும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் கதறி அழுது பிரபுவின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.

  இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரபு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது தான் 2வது திருமணம் செய்யப் போவதாக பிரபு கூறவே சண்டை அதிகமானது.

  ஒருகட்டத்தில் பிரபு போதையில் படுத்து துாங்கி விட்டார்; ஆனால் உமாமகேஸ்வரி குழந்தைகளை ஒரு அறையில் படுக்க வைத்து விட்டு, வேதனையில் விழித்திருந்தார். நேரம் செல்லச் செல்ல கணவர் மீதான கோபம் அவருக்கு அதிகரித்துள்ளது

  கணவர் கைவிட்டால் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற பயமும் சேர்ந்துள்ளது. ஆத்திரத்தில், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கி கொண்டு இருந்த கணவரின் கழுத்திலும் மார்பிலும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

  அரிவாள் வெட்டால் அதிர்ச்சியடைந்த பிரபு, அலறி அடித்துக் கொண்டு எழுந்து வீட்டு வாசலுக்கு ஓடி வந்தார். எனினும் அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் வீட்டு வாசலில் விழுந்து உயிரிழந்தார்.

  அதன்பின் உமாமகேஸ்வரி நேரடியாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்திற்கு நடந்தே சென்று சரணடைந்தார். அதையடுத்தே போலீசாருக்கு இப்படி ஒரு கொலை நடந்த சம்பவம் தெரியவந்தது. உமா மகேஸ்வரியைக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  2வது திருமணம் செய்ய முயன்ற கணவனை மனைவியே வெட்டி படுகொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: