மானமிழந்து, மரியாதையிழந்து வாழப் பிடிக்கவில்லை - மனைவி குடும்பத்தால் தாக்கப்பட்ட காவலர் கடிதம் எழுதி மாயம்

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுமுறையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற காவலர், 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளார்.

  • Share this:
    சொத்துக்காக மனைவி குடும்பமே கணவரை சரமாரியாக அடித்து நகை, பணத்தைப் பிடுங்கியதால் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக கடிதத்தில் கணவர் எழுதியுள்ளார். 

    கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பின்னமூட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2011ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த ஷெலின் ஷீபா என்று பெண்ணுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஜிஜால் சிங் என்ற மகனும், 6 வயதில் ஷைஷா என்ற மகளும் உள்ளனர்.

    காவலர் ஜினிகுமார் சென்னையில் இருந்து கடந்த 6ம் தேதி நட்டாலத்தில் தனது தாய் வீட்டில் வசித்து வரும் மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவரது பெயரில் நட்டாலம், வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துக்களை தனது மகளின் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என மாமியார் லலிதாவும், மனைவி ஷெலின் மற்றும் மைத்துனர் அஜின் ஆகியோர் கேட்டுள்ளனர்.

    சொத்துக்களை எழுதி வைக்க ஜினிகுமார் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து அவரது கையைப் பிடித்து கட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

    இதில் மனம் உடைந்த ஜினிகுமார், தந்தை பர்னபாசிடம் எதுவும் சொல்லாமல் தனது வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி காலையில் ஜினிகுமார் தனது வீ்ட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். தந்தை பர்னபாஸ் அவரைத் தேடிய போது அவரது அறையில் 22 பக்க கடிதம் இருந்துள்ளது.

    அந்தக் கடிதத்தில், தந்தை பர்னபாஸ், வறுமையான சூழலில், ஒழுக்கத்துடனும் கண்டிப்புடனும் தன்னை வளர்த்ததை நினைவுகூர்ந்துள்ளார் ஜினிகுமார். தந்தை செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டே தன்னையும் 2 சகோதரிகளையும் படிக்க வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

    தானும் தந்தையுடன் வேலை பார்த்ததையும் பின்னர் கல்லுாரி முடித்து தந்தைக்கு விருப்பமான காவல்துறையில் பணிக்கு சேர்ந்தது குறித்தும் எழுதியுள்ளார். தங்கைகள் திருமணத்திற்குப் பின் தனக்குத் திருமணமாகி தான் எதிர்கொண்ட குடும்பச் சிக்கல்களை விவரித்து ஜினிகுமார் எழுதியுள்ளார்.

    தனது குடும்பத்திற்கு நேர் எதிரான குடும்பமாக மனைவி குடும்பம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்களிடம் இருந்து விலகியிருக்க தனது மனைவியைக் கூட அவரது தாய் வீட்டிற்கு அனுப்பாமல் இருந்ததையும் தெரிவித்துள்ளார்.

    முதல் குழந்தை மகப்பேற்றிற்காக தாய் வீடு சென்று 2 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பிய மனைவி ஷெலினின் போக்கு அதன்பின் மாறி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சொத்துக்களையும் தந்தை வசிக்கும் வீட்டையும் தன் பெயரில் எழுதி வைக்கும்படி தன் குடும்பத்துடன் சேர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தாகவும் தெரிவித்துள்ளார்.

    அதன் உச்சகட்டமாகத் தான், கடந்த 6ம் தேதி, தனது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் மூவரும் சேர்ந்து தன்னை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் படிக்க...உங்கள் தொகுதி: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

    மாமியார் லலிதா தனது கழுத்தில் இருந்த செயினைப் பறித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மானமிழந்து, மரியாதை இழந்து, நிம்மதி இழந்து குடும்பத்தில் வாழப் பிடிக்கவில்லை என்றும் அதனால் அமைதியான முறையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாகவும் கடிதத்தின் இறுதியில் ஜினிகுமார் தெரிவித்துள்ளார்.

    கடைசியாக, மனைவி குடும்பத்தினரால் மிரட்டல், அச்சுறுத்தல் இருப்பதால் தந்தை சட்டரீதியில் தன்னைக் காத்துக் கொள்ளும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து தனது மகனைக் கண்டுபிடித்து தரும்படியும், மருமகளிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரும்படியும் தந்தை பர்னபாஸ் அருமனை போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

    சொத்துக்காக, மனைவியின் குடும்பமே சேர்ந்து கணவனைத் தாக்கி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, வீட்டை விட்டு வெளியேறும்படி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: