Exclusive | 12ம் வகுப்பு தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ்

கொரோனா பாதிப்பால் எந்த மாணவரும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்துவிடக்கூடாது என்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

  • Share this:
    மாணவர் நலன் கருதி தமிழகத்தில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர்ந்து, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்த குழு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீயூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள், சட்டமன்ற பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு வல்லுநர்களின் கருத்துகளை கேட்டுப்பெற்ற அறிக்கையை முதல்வரிடம் இன்று மாலை சமர்பித்தோம். அதில் குறிப்பாக மருத்துவ நிபுணர்கள் கூறும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில், ஐசிஎம்ஆர் பிராந்தியத் தலைவர், ஐஎம்எச் தலைவர், சிஎம்சி தலைவர் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, இன்று அனைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தின் போதும், அவர்கள் அனைவரும் குழந்தைகளின் உடல்நலம் மிகவும் முக்கியம். அதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் எந்தளவு முக்கியமோ, அதே அளவு இந்த தொற்றுக் காலத்தில் மாணவர்களின் உடல் நலனும் முக்கியம். அதனை கருத்தில் கொண்டு நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள்.

    கொரோனா பாதிப்பால் எந்த மாணவரும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்துவிடக்கூடாது என்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக யோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததுடன், ஒரு குழுவை நியமித்துள்ளார். அதேபோல், நாமும் ஒரு குழுவை நியமித்துள்ளோம்.

    அந்த குழுவை எதற்காக நியமித்துள்ளோம் என்றால், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் நியமனம் செய்வது எப்படி.. 12ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து தான் குழந்தைகளின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சி உள்ளது. அதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் தகுதிகள் அடிப்படையில் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதற்காகவே அந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் மாணவர்களின் எதிர்காலத்தை கைவிட மாட்டோம். மாணவர்கள் நலனுக்காக 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை பிரதமர் மோடி ரத்து செய்து அறிவித்தார். அதேபோல், நீட் தேர்வு நடந்தாலும், இதேபோன்ற தொற்று பாதிப்பு நிலை ஏற்படும் என்பதால், நீட் தேர்வு உள்ளிட்ட எந்தவொரு நுழைவுத் தேர்வையும் நடத்தக்கூடாது என பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: