தொண்டாமுத்தூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் விடப்பட்டதில் பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முறைகேட்டில் சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களும் இதில் சிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கையை ஏன் அரசு இன்னும் எடுக்கவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன் ?
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டெண்டர் முறைகேடு குறித்து மநீம கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி, 7மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.