• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத்திய அரசு கூட்டங்களில் பங்கேற்காதது ஏன்? திட்டமிட்டு தவிர்க்கிறதா தமிழக அரசு? எதிர்க்கட்சிகள் கேள்வி

மத்திய அரசு கூட்டங்களில் பங்கேற்காதது ஏன்? திட்டமிட்டு தவிர்க்கிறதா தமிழக அரசு? எதிர்க்கட்சிகள் கேள்வி

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

மத்திய அரசு கூட்டங்களில் பங்கேற்காதது ஏன் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், கூட்டங்களை திட்டமிட்டு தவிர்ப்பதாக புகார் தெரிவித்துள்ளன.

  • Share this:
    ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது, தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதாது, பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் இருவரும் பங்கேற்காதது போன்றவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

    கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் ஜெக்குமாருடன், ட்விட்டரில் பழனிவேல் தியாகராஜ் நடத்திய வார்த்தை பேர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உச்சக்கட்டமாக, உறவினரின் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டதால், லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிடிஆர், அது உறவினர் வீட்டு விழா இல்லை, சமுதாய வளைகாப்பு விழா என தெளிவுபடுத்தினார். மேலும் தனக்கு கொழுந்தியாள் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். ஒரு வழியாக இந்த பிரச்னை ஓய்ந்த நிலையில், திருப்பதியில், அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென் மண்டல முதலமைச்சர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதால் அது தொடர்பான நடவடிக்கைகளில் அவர் தீவிரம் காட்டுவதால் ஸ்டாலின் இந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்த இன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கவில்லை.

    இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிவரும் எதிர்க்கட்சிகள், மத்திய அரசு நடத்தும் கூட்டங்களை தமிழ்நாடு அரசு திட்டமிட்டே தவிர்த்து வருவதாக குற்றம்சாட்டி இருக்கின்றன. புதிதாக பதவியேற்ற திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை இல்லை என்று விமர்சித்து வருகின்றன.

    ஆனால் தேவையில்லாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குற்றம்சாட்டி இருக்கும் திமுக, மத்திய அரசின் கூட்டங்களை திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை என்று கூறியுள்ளது. தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக மத்திய அரசின் கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் தேவையை எடுத்து கூறி வருவதாக விளக்கம் அளித்து இருக்கிறது.

    எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் அதேநேரத்தில், கனமழையால் தத்தளித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசு யாரையும் அனுப்பாதது ஏன் என்றும் திருப்பதி வரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராதது ஏன் என்று திமுக கேள்வி எழுப்பி இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: