ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? - ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு விளக்கம்

நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? - ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு விளக்கம்

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

Governor RN Ravi : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைத்தால் மட்டுமே அவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகிய மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

இந்நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்திற்கு ஆளுநர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கூட்டுறவு சங்க திருத்த மசோதாவைப் பொருத்தவரை, விதிகளை மீறி செயல்படுவதாக கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும், விசாரணையின்றி கலைக்கவும் உத்தரவிட அரசு ஊழியர்களான கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அம்சத்திற்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கும் ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆனால், மாநில அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்கிறது ஆளுநர் தரப்பு. அடுத்ததாக, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவில், பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படுபவருக்கு கல்வித்தகுதியோ, அனுபவமோ தேவையில்லை என்று கூறப்பட்டுள்ள அம்சத்திற்கு ஆளுநர் ஆட்சேபித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஆளுநர் தரப்பு, பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவை அனுப்பிவைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தன்னை சந்தித்தபோது, மசோதா தொடர்பான நிலை, சட்டபூர்வ சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின்படி அரசு செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தனது நிலைப்பாட்டை முதலமைச்சருக்கு, தலைமை செயலாளர் புரிய வைத்திருப்பார் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியிருகிகறார். ஆளுநருக்கு எதிராக மக்களவையில் திமுகவினர் எழுப்பி வரும் குரல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆர்.என்.ரவி, தனது பொறுப்பை தான் கவனித்து வருவதாகவும், திமுகவினரின் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், நீட் தேர்வு விலக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை, கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாகக் குறைப்பதற்கான கூட்டுறவுச் சங்கச் சட்டம், மாதவரத்தில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க வரைவு மசோதா, பாரதியார் பல்கலைக் கழகச் சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இதில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழ் நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Read More: 'Y' பிரிவு பாதுகாப்பு... இது தான் அண்ணாமலை தைரியம் - துரை வைகோ விமர்சனம்

ஆனால் இவற்றை கிடப்பில் போட்டுள்ளதால் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்பப் பெறக் கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருந்தது. இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும் நீட் தேர்வு விவகாரம் குறித்து பேச திமுக எம்.பிக்கள் அனுமதி கோரினர். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்வதாகவும், இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Must Read : மதப் பிரச்சனையால் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வர ஐ.டி நிறுவனங்கள் விரும்புகின்றன- அமைச்சர் பி.டி.ஆர்

தொடர்ந்து மக்களவையில் நண்பகலுக்கு பிறகும் திமுக, காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்னையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். நீட் தேர்வு விலக்கு மற்றும் ஆளுநரை திரும்பப் பெறுவது தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் 2வது முறையாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Neet Exam, RN Ravi, Tamil Nadu Governor