தமிழ்நாட்டில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில், மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக பணிபுரிந்து வந்த முத்துமாலைராணி என்பவர் நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மருந்து ஸ்டோர் அதிகாரியாக இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியாகி, அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, புதிய நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மருந்து நிறுவனங்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனவா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.