• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? - வைகோ பதில்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? - வைகோ பதில்

வைகோ - மு.க.ஸ்டாலின்

வைகோ - மு.க.ஸ்டாலின்

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    மதிமுக தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்படுவதாகவும் அதனால் தான் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் இன்று திமுக - மதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கடந்த தேர்தல்களில் எல்லாம் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட்டதே இந்த முறை ஏன் இந்த மனமாற்றம் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ, “ஒரு கட்சி 12 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட்டால் தான் 5 சதவீத அடிப்படையில் ஒரே சின்னத்தில் எல்லா இடங்களிலும் போட்டியிடலாம்.

    12 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிட்டால் ஒவ்வொரு தொகுதிக்கும் வேறு வேறு சின்னங்களில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படலாம் இந்த நெருக்கடியான சூழலை தவிர்ப்பதற்கும், 12 நாட்கள் மட்டுமே பிரசாரத்திற்கு இருப்பதனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம்” என்று கூறினார்.

    மேலும் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக திமுகவோடு கைகோர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதலமைச்சராக வர தகுதியான வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பார்க்கிறேன் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: