மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யவில்லை. கருணாநிதிக்கு பேரறிவாளன் விடுதலையில் உடன்பாடு இல்லையா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், அதனை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் நீதிமன்றங்கள் மீதும் பாரதிய ஜனதா கட்சி மிகபெரிய நம்பிக்கை வைத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள்தான் மிகப்பெரிய நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் வழங்கி கொண்டிருக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
மாநில அரசின் உரிமைகளிலோ ஆளுனரின் அதிகாரங்களிலோ தமிழக அரசைத் தவிர நீதிமன்றங்களுக்கும் அல்லது மத்திய அரசுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. நீதியரசர் நாகேஸ்வர ராவ் முன்னர் விசாரணையின்போது கேட்ட விளக்கங்கள் எல்லாம் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்த கண்டனங்கள் போல் முதல்வர் தன் அறிக்கையில்பசப்பியுள்ள கருத்துக்களில் துளியும் உண்மையில்லை.
இதையும் படிங்க: பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை..வழக்கு கடந்துவந்த பாதை
நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசுக்கோ ஆளுனருக்கோ எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. மரணங்களில் அரசியல் செய்யும் மாநிலக்கட்சிகள் இதையும் அரசியலாக்க முயற்சிப்பதில் வியப்பில்லை. ஆனால் அதில் துளிகூட உண்மையில்லை என்பது மக்களுக்கு தெரியும். அப்படி மத்திய மாநில உரிமைகளைப் பற்றிய பெரிய புரிதல் இருப்பவர்கள் மத்திய அரசில் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திலும் திமுகவின் ஆட்சிதானே இருந்தது. 2006 முதல் 2011 வரை கலைஞர் தானே முதலமைச்சர்?
அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யவில்லை. கருணாநிதிக்கு பேரறிவாளன் விடுதலையில் உடன்பாடு இல்லையா? அல்லது கலைஞரைவிடத் தான் அரசியல் வித்தகம் மிக்கவர் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா?
மேலும் படிக்க: அன்று கோட்சே.. இன்று பேரறிவாளன்.. தமிழக காங்கிரஸ் எம்.பி. காட்டம்
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டம் 142ன் படி தன் உச்சபட்ச சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. திமுகவைப் பொறுத்தவரை காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது. பரந்துபட்ட பாரத தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் எந்தவித சமரசமும் இல்லாமல் உறுதி செய்யும் உயர்ந்த இடத்தில் உச்ச நீதிமன்றம் இருப்பதை நன்கு உணர்ந்த நீதிபதிகள் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பை தமிழக பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்கிறது’ என கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, DMK Karunanidhi, Perarivalan, Rajiv Gandhi Murder case