ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் பி.காம் படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக தெரிகிறது. மனமுடைந்த சுரேஷ் 'வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம் நண்பர்களிடம் வாங்கிய பணம் முழுவதையும் ரம்மியில் இழந்து விட்டேன். மேலும் ஆன்லைன் ரம்மியில்இருந்து மீளமுடியவில்லை’ எனவும் Bye Bye Miss U ரம்மி எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அண்மைக் காலமாக ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்த வேதனையில் ராசிபுரம் அருகே சுரேஷ் என்ற பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சுரேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று கடந்த ஆண்டு இதே நாளில் தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்றிலிருந்து இன்று வரையிலான ஓராண்டில் 28 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் உயிரை இழந்திருக்கின்றனர்!
ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் கடிதம் தான் சாட்சியம். பணம் இருந்தால் 5 நிமிடம் கூட ஆன்லைன் ரம்மி ஆடாமல் இருக்க முடியவில்லை என்று இளைஞர் சுரேஷ் கடிதம் எழுதி வைத்திருக்கிறார்!
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online rummy, Ramadoss