துணைமுதல்வர் பதவிக்கு அதிகாரம் இல்லையென்றாலும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்றுக்கொண்டேன் என
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக
எடப்பாடி பழனிசாமியும் இருந்து கட்சியை வழிநடத்தி வருகின்றனர். இந்தநிலையில், வரும் ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் சர்ச்சையாக எழுந்துள்ளது.
இந்நிலையில், ஒற்றை தலைமை சர்ச்சை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கட்சியின் விதிப்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்தல் மூலமே தேர்வு செய்ய முடியும். நிர்வாகிகள் தேர்வு செய்ய முடியாது. ஒற்றை தலைமை சர்ச்சை ஏன் உருவாக்கப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை.
துணை முதல்வர் பதவிக்கு அதிகாரம் இல்லையென்றாலும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த பதவியை ஏற்றுகொண்டேன். எந்தவித அதிகார ஆசையும் நான் கொண்டவன் அல்ல. தொண்டர்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது. தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம், அமைதி காக்கவேண்டும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை குறித்து பேட்டி அளித்ததால் இந்த பிரச்சனை பூதாகரமாகியுள்ளது.
எதிர்கட்சியாக நாம் இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த பணியாற்ற வேண்டுமே தவிர இந்த நேரத்தில் இந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை தேவைதானா? பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வரக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதனால், இனி பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவுக்குச் செய்கிற துரோகம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒற்றை தலைமை பற்றி நானோ, ஈபிஎஸ்சோ அல்லது 2 பேரும் இணைந்தோ பேசியது அல்ல. இரட்டைத் தலைமயே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அதனால், இரட்டைத் தலைமையே தொடர வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு நானும், எடப்பாடியும் ஒரே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். அதேபோல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் பேச நான் தயார், எந்தக் காரணத்திற்காகவும் கட்சி இரண்டாக உடையக் கூடாது. நானும், எடப்பாடியும் கலந்து பேசி ஒற்றை தலைமை பற்றி பேசியவர்களை கண்டிக்க வேண்டும். பொதுக்குழுவுக்கு முன்னதாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்துவிட்டால், பொதுக்குழுவில் எந்த பிரச்னையும் வராது. ஒற்றைத் தலைமை பிரச்னை குறித்து எப்போதும் நான் பேச தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.