• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? துரைமுருகன் விளக்கம்

கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? துரைமுருகன் விளக்கம்

துரைமுருகன்

துரைமுருகன்

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
    முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையின் கீழ் உள்ள மரங்களை வெட்டும் விவகாரத்தில், கேரள வனத்துறை அமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்க முடியும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியே தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து வைத்ததாகத் தெரிவித்தார். அணை திறப்பு குறித்து கேரள அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்த நிலையில், எதிர்பாராதவிதமாக அம்மாநில அமைச்சர் அணை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்ததாக விளக்கமளித்தார்.

    பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்ட கேரள அதிகாரிகள் அனுமதி வழங்கி அதற்கான ஆணையை அனுப்பி வைத்ததாகவும், வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட 15 மரங்கள் என்ன வகையான மரங்கள் என்பது குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியதாகவும், இதனை புரிந்துகொள்ளாமல் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் துரைமுருகன் விமர்சித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆவணங்களில் தகவல் இல்லை என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

    இதனிடையயே முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பம் வ.உசி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதன்பின்னர் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தேக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போராடி பெற்று தந்த உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டதாக கூறினார்.

    பேபி அணைக்கு கீழ் உள்ள மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு அனுமதி அளித்திருப்பாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி முல்லை பெரியாரில் நீரை தேக்குவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சப்பைக்கட்டு கட்டுவதாக விமர்சித்துள்ளார்.  இதேபோல மதுரை முனிச்சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: