சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஏன் வெயிலின் தாக்கம் அதிகம்... எப்போது குறையும்...?

வட மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் இல்லாததால், தமிழகத்தில் இந்த ஆண்டு மழைப்பொழிவு வழக்கத்தை விட குறைவாக இருக்கும்

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஏன் வெயிலின் தாக்கம் அதிகம்... எப்போது குறையும்...?
மாதிரிப்படம் (Source: AP)
  • News18
  • Last Updated: June 16, 2019, 7:18 AM IST
  • Share this:
தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும், சென்னையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், வெயிலின் தாக்கம் குறைய இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்தரி வெயில் முடிந்து 20 நாட்களாகியும் இன்னும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே அனல் காற்று வீசி வருகிறது.

சென்னையில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது


வழக்கமாக கோடை காலத்தில் பெய்யும் கோடை மழையம் இந்த ஆண்டு பெய்யவில்லை. இதனால் சென்னையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் ஏன்?

சென்னையை பொருத்தவரை மேற்கு திசையிலிருந்து காற்று வீசும் போதுதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தால், மேற்கில் இருந்து வீசும் காற்றில் ஓரளவு ஈரப்பதம் இருந்திருக்கும், வெயிலின் தாக்கம் இந்தளவு இருந்திருக்காது என்கிறார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்.

சென்னையை பொருத்தவரை கடல்காற்று நிலப்பகுதிக்கு வருவதால் தான் வெயிலின் தாக்கம் கட்டுக்குள் இருந்து வருகிறது. ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்கிய உடன், கடல் காற்று வலுவிழந்து மேற்கில் இருந்து வீசும் காற்று வலுவடையும். அப்படி மேற்கில் இருந்து வீசும் வெப்பக்காற்று தற்போது வலுவடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் வெயிலின் தாக்கத்தில் சிக்கியுள்ளன.மேலும், கடந்த மே மாதம் வங்க கடலில் உருவாகி ஒடிசாவை தாக்கிய ஃபானி புயல் தமிழகத்திற்கு அப்போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவிலலை. ஆனால் அதன் பாதிப்பு இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீச வேண்டிய ஈரக்காற்றையும் ஃபானி புயல் எடுத்துச் சென்றுவிட்டது. போதிய ஈரப்பதம் இல்லாததாலும், கடல்காற்று உட்புகாததாலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்லமுடியாத அளவு அனல் காற்று வீசுகிறது.

அதே நேரம் வட மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் இல்லாததால், தமிழகத்தில் இந்த ஆண்டு மழைப்பொழிவு வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

First published: June 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்