வேளாண் அலுவலர் பணி ஆணை வழங்க தாமதம் ஏன்? – ராமதாஸ்

news18
Updated: March 13, 2018, 3:33 PM IST
வேளாண் அலுவலர் பணி ஆணை வழங்க தாமதம் ஏன்? – ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
news18
Updated: March 13, 2018, 3:33 PM IST
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் அலுவலர் பணி ஆணை வழங்குவதில் தாமதம் ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முடிவடைந்து 5 மாதங்களாகியும் இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இதனால், தேர்வு எழுதியோர் மத்தியில் தேவையற்ற கவலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 206 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை போட்டித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அடுத்த 10 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன. போட்டித்தேர்வுகளில் பங்கேற்ற 3,000 பேரில் இருந்து, ஒரு பணிக்கு இருவர் வீதம் 416 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கடந்த அக்டோபர் 9 முதல் 12-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட்டன. வழக்கமாக நேர்காணல் முடிவுகளை இரு நாட்களில் வெளியிட்டு, நியமன ஆணைகளை வழங்கி இருக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில் தேவையின்றி தாமதம் செய்யப்படுவது ஏன்? எனத் தெரியவில்லை.

உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்று வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த இளைஞர்கள் கடந்த ஜனவரி மாத இறுதியில் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், பணி நியமன ஆணை வழங்கும் நடைமுறைகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், அதன் பின்னர் ஒன்றரை மாதங்களாகியும் இவ்விஷயத்தில்  எந்த முன்னேற்றமும் இல்லை. பல்கலைக்கழகத்தின் சார்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Loading...
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் இராமசாமி எந்த முறைகேடுகளிலும் ஈடுபடாதவர் என்ற பெயர் பெற்றவர். ஆனால், வேளாண்துறை அமைச்சரும், அவரது உறவினர்களும்  இந்த விவகாரத்தில் தலையிட்டு முறைகேடுகள் செய்ய முயல்வதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

எனவே, பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்காவிட்டால் கோவை வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்