சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோயம்பேடு சந்தையில் மொத்த பழ வியாபாரம் தொடங்கியது..

சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோயம்பேடு சந்தையில் மொத்த பழ வியாபாரம் தொடங்கியது..

கோப்பு படம்

கோயம்பேடு சந்தையில் ஆறு மாதங்களுக்கு பிறகு மொத்த பழ வியாபாரம் தொடங்கியது.

 • Share this:
  கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், மொத்த காய்கறி வியாபாரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பழ வியாபாரத்திற்கும், சில்லரை வணிகத்திற்கும் தடை நீட்டிக்கப்பட்டதால் வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. உடனடியாக வியாபாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சில்லரை வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினர்.

  இந்த நிலையில், நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, கோயம்பேடு சந்தையில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயம்பேடு சந்தையில், பழ அங்காடியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்ட வடிவமைப்பாளர் பெரியசாமி மற்றும் அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நேற்றிரவு திறந்து வைத்தனர்.

  இதனைத் தொடர்ந்து, சரக்கு வாகனங்கள் மூலம் பழங்கள் அனுமதிக்கப்பட்டன. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஓட்டுநர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. பழ வியாபாரத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்.

  முன்னதாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு, சந்தைக்குள் பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், சில்லறை வியாபாரமும், தனி நபர் கொள்முதலும் செய்ய அனுமதியில்லை என்றும் அறிவித்தது.

  வியாபாரிகள் அவரவர் கடைக்கு வெளியிலோ, பொது இடங்களிலோ வியாபாரம் செய்யக்கூடாது எனவும், வெள்ளிக்கிழமை தோறும் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் இரவு 7 மணி முதல், காலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

  மேலும் படிக்க...காதலை ஏற்காத 17 வயது சிறுமியை குத்திக்கொன்ற சட்டக்கல்லூரி மாணவர்.. நடந்தது என்ன? கடும் நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு..


  இந்நிலையில், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் 16-ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: