காரைக்கால் மாவட்டத்தில் நீண்டகாலமாக
பாமக செயலாளராக தேவமணி (53) இருந்து வந்தார். இவரது வீடு திருநள்ளார் மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகே உள்ளது. இவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகில் அதே மெயின் சாலையில் உள்ளது. நேற்று இரவு 10.00 மணி கட்சி அலுவலகத்தில் இருந்து, தேவமணி வீடு நோக்கி அவரது ஆதரவாளர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், தேவமணி வீட்டுக்கு நூறு மீட்டர் தூரம் உள்ள நிலையில், மோட்டார் சைக்கிளை வழிமறித்து, தேவமணியை சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து, தேவமணியை நண்பர்கள், ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவமணி இறந்து போனார். இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில், தேவமணியை படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளரும், அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான தேவமணி திருநள்ளாறில் நேற்றிரவு கூலிப்படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொடியவர்களால் படுகொலை செய்யப்பட்ட தேவமணி உணர்வு மிக்க பாட்டாளி ஆவார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர். அந்த பகுதி மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்றவர். திருநள்ளார் பகுதியில் பொதுநலனுக்காக பாடுபட்டவர்.
புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டவிரோதமாக உயர்த்திய போது, அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் களையும் நோக்குடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்து வரி உயர்வை ரத்து செய்தவர்; அதன்மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். புதுவை மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி அவற்றை மூடுவதற்கு வகை செய்தவர்.
என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் பற்றும் கொண்டவர். கட்சி வளர்ச்சி மற்றும் பொதுநலன் சார்ந்து நான் இட்ட பணிகள் அனைத்தையும் உடனடியாக செய்து முடிப்பது அவரது வழக்கம். திருநள்ளார் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், அரசியலிலும், பொதுவாழ்விலும் உயரங்களை தொட்டிருக்க வேண்டியவர். மிக இளம் வயதில் அவர் நம்மை விட்டு பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை; மிகுந்த துயரமளிக்கிறது.
காரைக்கால் தேவமணியை படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது கூலிப்படையை ஏவி கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும். தேவமணியின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவரது குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.