வைகோ ராசி இல்லாதவரா, இப்ப என்ன சொல்றீங்க? துரை வைகோ

துரை வையாபுரி

வைகோ ராசி இல்லாதவர் என்று சமூக வளைதளங்களில் பரப்பட்ட செய்திக்கு இந்த தேர்தலில் விடை கிடைத்துள்ளது என் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

  • Share this:
மதிமுக 28-ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகரில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்தது. உதித்தது உதய சூரியன். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் பல சிக்கல்கள், பிரச்சினைகள் தமிழகத்தை சூழ்ந்திருந்தது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2-வது அலை வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அஜாக்கிரதை போக்கால், 2-வது அலை மிகவும் அபாயகரமாக போய் கொண்டுள்ளது. பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்பதை போல், தமிழக அரசு பொறுப்பை திமுக ஏற்க உள்ளது. இந்த நேரத்தில் மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்கள், கிராமங்களில் கரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது.

தினமும், மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லை, வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கதறி அழுகின்றனர். இந்த பிரச்சினை கையை மீறி சென்றுக் கொண்டுள்ளது. இதனால் தான் மதிமுக தலைவர் வைகோ, கொரோனா 2-வது அலை எப்படி சமாளிப்பது என 5 முக்கியமான அம்சங்களை எழுதி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

இதில், முக்கியமானது 10 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. கடந்த அதிமுக அரசு அந்த பணியிடங்களை நிரப்பவில்லை. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிகம் பேர் வருவதால் பெரிய சவாலாக உள்ளது. இதனை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சங்களை திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். அதே போல், கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவது தான் எனது முதல் பணி என ஸ்டாலினும் தெரிவித்துள்ளார். இது பெரிய சவால் தான். இந்த சவாலை ஸ்டாலின் சமாளிப்பார் என்ற நம்பிக்கை கூட்டணி கட்சிகளுக்கும், மக்களுக்கும் உள்ளது.

கோவில்பட்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்ட சீனிவாசன் நல்ல வேட்பாளர். நேர்மையானவர், மக்கள் சேகவர். அதிமுக, அமமுக வாக்குக்கு பணம் வழங்கினர். இரு தரப்பும் அதிகளவு பணம் செலவு செய்தனர். மேலும், சாதிய வன்ம பிரச்சாரமும் ஒருபுறம் நடந்தது. சாதி சம்பந்தமான பிரச்சாரம், பணம் பலம் என இந்த இரண்டும் வாக்கு வித்தியாசத்தை உருவாக்கியது என்பது எனது கருத்து. பணம், சாதிக்கு முன்பு தோற்றது சீனிவாசன் கிடையாது. நல்ல வேட்பாளர் தோல்வியுற்றுள்ளார். ஜனநாயகம் தோற்றுள்ளது.

மதிமுகவை பொறுத்தவரை, குறுகிய காலகட்டத்தில் புதிய சின்னம் கொடுத்து அதனை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது சில சிரமங்கள் இருந்ததால், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அடுத்த தேர்தலில் எங்களுக்குரிய தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

சமூக வலைதளங்களில் மூடநம்பிக்கையோடு வைகோவை ராசி இல்லாதவர் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது. கேரளாவில் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும், தமிழகத்தில் ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளனர். வைகோ ராசி இல்லாதவர் கிடையாது. கடந்த காலங்களில் அவர் கூட்டணி வைத்த கட்சிகள் வென்றுள்ளதாக தெரிவித்தார்
Published by:Vijay R
First published: