அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார்? லிஸ்ட்டில் இருக்கும் சீனியர்ஸ்

அஇஅதிமுக அலுவலகம்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைந்த நிலையில் அக்கட்சியின் அடுத்த அவைத்தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது ? யார் யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது.

 • Share this:
  கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவில் 1972ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆறு பேர் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளனர்.பாவலர் மா முத்துசாமி , கோவில்பட்டி வள்ளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன், சி பொன்னையன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோருக்குப் பின் 2007ஆம் ஆண்டு முதல் மதுசூதனன் இந்த பொறுப்பில் இருந்து வந்தார்.

  அவைத் தலைவர் என்கிற பொறுப்புக்கு அதிமுகவில் பெரிய அளவில் தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை என்றாலும், அந்தப் பதவி கௌரவமான பதவியாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் எம்ஜிஆர் இருந்த காலத்திலிருந்து அக்கட்சியில் பயணம் செய்தவர்கள் மட்டுமே இதுவரை அவைத்தலைவராக இருந்துள்ளனர். எனவே அடுத்த அவைத்தலைவரும் கட்சியின் மூத்த நிர்வாகியாகவும், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் நீடித்து வருபவராகவும் இருப்பார் என்று கூறப்படுகிறது.

  Also Read :  தமிழகத்தில் மீண்டும் யாத்திரையை தொடங்க உள்ள பாஜக!

  அந்த வகையில் முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தமிழ் மகன் உசேன்,பா.மோகன் ஆகியோர் தற்போது கட்சியின் நிர்வாக ரீதியில் மூத்த உறுப்பினர்களாக உள்ளனர், அதேவேளையில் மூத்த உறுப்பினர்களான வரகூர் அருணாச்சலம், திருச்சி நல்லுசாமி ஆகியோரும் அதிமுகவின் மூத்த முன்னோடிகளாக உள்ளனர். இவர்களில் ஒருவர் அதிமுகவின் அடுத்த அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச் செயலாளர் பதவி தான் அதிக அதிகாரங்கள் கொண்ட பதவி. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

  Also Read : கருணாநிதி பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம்: திருமாவளவன் வேண்டுகோள்

  பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு இந்த இரண்டு பதவிகளுக்கும் வழங்க பொதுக் குழு தீர்மானித்தது, கடந்த காலங்களில் பொதுச் செயலாளர், தற்போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியோடு கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அவைத்தலைவருக்கு உள்ளது. கட்சியில் பெரிதும் மதிக்கப்படும் அவைத்தலைவர் பதவியை அலங்கரிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: