ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.. ''பாதி அண்ணா'' என அழைக்கப்படும் இந்த அவ்வை நடராசன் யார்?

தமிழுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.. ''பாதி அண்ணா'' என அழைக்கப்படும் இந்த அவ்வை நடராசன் யார்?

அவ்வை நடராஜன்

அவ்வை நடராஜன்

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல், தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் ஔவை நடராசன் மட்டுமே.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil, India

  முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராசனின் இழப்பு, தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு என்று அறிஞர்கள் மற்றும் பெருமக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் பேச்சால் அனைவரையும் கவர்ந்த "பாதி அண்ணா ” என போற்றப்படும் அவ்வை நடராசனின் சிறப்புகள் பற்றி தெரியுமா?

  "ஒளவை" என்ற சொல் உதித்ததும் மேடைகளில் பொங்கிப் பெருக்கெடுத்து. அவையினரின் செவிகளில் தமிழமுது பாய்ச்சும் நாவுக்கரசர், நற்றமிழறிஞர், முனைவர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் தான் ஔவை நடராசன்.
  இவர், 1936-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஒளவையார் குப்பம் என்ற கிராமத்தில் உரைவேந்தர் என அழைக்கப்படும் தமிழறிஞர் ஒளவை துரைசாமி மற்றும் லோகாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார்.
  சிவபாத சேகரன் என்ற இயற்பெயர் கொண்ட அவருக்கு, அவரது தந்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய போது நடராசன் என பெயரை மாற்றினார்
  தந்தையைப் போன்றே தமிழ் இலக்கியத்தில் நாட்டம் கொண்ட ஔவை நடராசன், 1955-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். “சங்கக் காலப் பெண்பாற் புலவர்கள்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
  ஔவை நடராசன் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.
  டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், தனது குரலை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தார்.
  பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருக்கும் போதே, ஔவை நடராசனின் சொல்லாற்றலை கண்டு வியந்த கவிஞர் சுரதா, இவரை 'பாதி அண்ணா ” என்று பாராட்டினார்.
  கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க இவர் திருவாய் மலர்ந்தால், குற்றால அருவி கொட்டுவதைப் போலத் தமிழருவி 'தடதட' வெனப் பொழிந்து விழும்... தமிழின் இனிமையையும் தனித்தன்மையையும் மாணவர் மனங்கொள்ளும் வகையில் இலக்கிய மேற்கோள்களுடன் எடுத்துரைப்பார்.
  ஔவை நடராசனின் தமிழ்ப்புலமையால் ஈர்க்கப்பட்டு, 1974-75-ல் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராக பணியமர்த்தினார்.
  பின்னர், 1975 முதல் 1984 வரை தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக செயல்பட்டார்.
  1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராக பணியாற்றினார்.
  இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல், தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் ஔவை நடராசன் மட்டுமே.
  1992 முதல் 1995 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பை வகித்தார்.
  தமிழுக்கு ஆற்றிய பணிக்கு இடையே, வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, பாரதி பல்சுவை, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், அருளுக்கு ஔவை சொன்னது உள்ளிட்ட படைப்புகளையும் உருவாக்கினார்.
  தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய பங்கை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, பேரறிஞர் அண்ணா விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவை வழங்கப்பட்டன. அத்துடன், இலங்கை கம்பர் கழகத்தின் “தன்னேரில்லாத தமிழ் மகன் விருது” திருக்குறள் நெறிச்செம்மல் விருது உட்பட எண்ணிலடங்கா விருதுகளையும் புகழ் மாலையாக சூடியுள்ளார்.
  தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆளுமைத் திறனுடன் பேச்சாற்றல் கொண்டவர்களில் ஔவை நடராசனும் ஒருவர். எந்த தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தவொரு குறிப்பும் இன்றி அருவி போல் கொட்டும் அறிவுக் களஞ்சியம் தான் அவ்வை நடராசன்.
  "ஆங்கிலத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.
  வெளிநாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்று தமிழின் சிறப்பை பார் போற்றச் செய்தவர் நானிலம் புகழ்ந்த ஒளவை நடராசன். அவரின் இழப்பு தமிழுக்கான இழப்பு என்றே அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.
  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Anna, Tamil