திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

திருவெறும்பூர்

திருச்சியில் உள்ள திருவெறும்பூர் தொகுதி தேர்தல் களத்தில் தகிப்பு அதிகமாகவே இருக்கிறது. காரணம் ஏன்?

 • Share this:
  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், 3 தலைமுறைகளாக திமுகவின் விசுவாசியாக இருக்கும் அன்பில் தர்மலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார். அவருக்கு கடும் நெருக்கடி அளிக்கும் விதமாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமாரை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக. திராவிட கட்சிகள் வலிமையான வேட்பாளர்களை இறக்கியிருப்பதால், திருவெறும்பூர் தேர்தல் களத்தில் தகிப்பு அதிகமாகவே இருக்கிறது.

  டெல்டா மாவட்டமான திருச்சியின் அடையாளங்களாக இருக்கும் மகாரத்னா அந்தஸ்து பெற்ற பெல் நிறுவனம், இந்திய பாதுகாப்புத் துறையின் படைக்கலத் தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே பணிமனை ஆகியவை, திருவெறும்பூரில் அமைந்துள்ளன. திரு எறும்பீஸ்வரர் கோயில், திருநெடுங்குளம் சிவன் கோயில் உள்ளிட்டவை ஆன்மீக அடையாளங்களாகவும் திகழ்கின்றன. இவை மட்டுமின்றி, இந்திய அளவில் தனித்துவம் பெற்ற துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கழகம் , இந்திய மேலாண்மை நிறுவனம், பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவனம் , பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் என பல கல்வி நிலையங்களும் இருப்பதால் உயர்கல்வி கேந்திரமாகவும் திருவெறும்பூர் திகழ்கிறது.

  திருவெறும்பூர் தொகுதியில் மொத்தம் 2,91,891 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,43,229 பேர், பெண் வாக்காளர்கள் 1,48,609 பேர். முக்குலத்தோர், குறிப்பாக கள்ளர் சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கும் திருவெறும்பூர் தொகுதியில், தற்போது களத்தில் உள்ள திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய 5 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், கடந்த காலங்களில் சமூக வாக்குகளை நம்பி போட்டியிட்ட வேட்பாளர்களை தோற்கடித்த வரலாறும் திருவெறும்பூர் தொகுதிக்கு உண்டு.

  தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ. ஆக இருக்கும் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் எழுச்சியில் முக்கிய தளபதியாக திகழ்வார் என்று திமுக தலைமை உறுதியாக நம்புகிறது. இதன் காரணமாகவே, திருச்சி திமுகவில் அசைக்க முடியாத நபராக அன்பில் மகேஷ் வலம் வருகிறார். ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அன்பில் பொய்யாமொழியின் மகன் என்ற வகையில், திமுகவின் முக்கிய தலைவர்களான கே.என்.நேரு உள்ளிட்டோரும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது அன்பில் மகேஷ்-க்கு சாதகமான அம்சம். திருவெறும்பூரில் மீண்டும் வெற்றி பெற்று, இந்த தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் என்று கூறுகிறார் அன்பில் மகேஷ்.

  மறுபுறம் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான குமார், திருவெறும்பூர் தொகுதியில் கடந்த பத்தாண்டுகளாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக கூறுகிறார். விவசாய கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு உள்ளிட்ட அதிமுக அரசின் அறிவிப்புகள் கிராமப்புறங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால், திருவெறும்பூரில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார்.

  திமுக, அதிமுகவை தவிர்த்து அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் சார்பில் வேட்பாளர் செந்தில்குமார், இந்த தொகுதியில் 3வது முறையாக களமிறங்குகிறார். 2011ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும் தனக்கே வாய்ப்பு என கூறுகிறார் செந்தில்குமார்

  அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிக்கும் என கூறப்படும் நிலையில், தேமுதிகவுக்கு இருக்கும் செல்வாக்கும் சேர்ந்தால், செந்தில்குமார் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

  மேலும் படிக்க...முக்கிய வேட்பாளர்கள் போட்டியால் நட்சத்திர அந்தஸ்து பெறும் கோவில்பட்டி தொகுதி

  இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் முருகானந்தமும், திருவெறும்பூர் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார். மண்ணின் மைந்தராக களமிறங்கும் முருகானந்தம், அதிமுக, திமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளை வென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்வோம் என்று உறுதியாக கூறுகிறார்.

  இவர்கள் மட்டுமின்றி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிய நாம் தமிழர் வேட்பாளர் சோழசூரன். திருவெறும்பூரில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சூளுரைக்கிறார் சோழசூரன்..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: