விவசாய கடன் தள்ளுபடியால் யாருக்கு பலன்? அதிமுக - திமுகவினரிடையே தொடரும் கருத்து மோதல்

கோப்புப் படம்

விவசாய கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின் திமுக மற்றும் அதிமுகவினரிடையே இதனால் யாருக்கு லாபம் அதிகம் என்று விவாதம் அதிகரித்து வருகிறது.

  • Share this:
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஆண்டு ஜூன் 12ம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைத்தது. ஆனால், ஆண்டின் இறுதியில் நிவர், புரெவி புயல்களினாலும் அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் பெய்த கனமழையாலும் நெற்பயிர்கள் நீரில் முழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. நன்கு விளைந்தும் அறுவடை செய்ய முடியாமல் பாழாகின. மேலும் தற்போது நடைபெற்று வரும் அறுவடையிலும் மகசூல் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர்,  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

கூட்டுறவு கடன் சங்கங்களில்  விவசாயிகள் பெற்ற ₹ 12, 110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்று முதலமைச்சர் கடந்த 5ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். இதையடுத்து கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கும் பணியும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ‘விவசாயக் கடன் தள்ளுபடியால் அதிமுகவினருக்கே பலன். கூட்டுறவு கடன் சங்கங்களில் அதிமுகவினரே பினாமி பெயர்களில் கடன் பெற்றுள்ளனர். கடன் பெற்றவர்களில் 90% பேர் அதிமுகவினர். மற்றவர்களுக்கு கடன் கொடுக்கவில்லை’ என்று திமுக முதன்மைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கடந்த 13ம் தேதி  நீயூஸ் 18க்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதற்கு, முன்னாள் எம்.பியும் அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான ப.குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிக் கடன் தள்ளுபடி தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மைக்கு மாறாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசின் விவசாய கடன் தள்ளுபடியால் திமுகவினருக்கே அதிக பலன். குறிப்பாக  திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ,  ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல திமுகவினருக்கும் பல லட்ச ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இதை ஆதாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்னென்ன?

அதிமுக திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் லால்குடியில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று கட்சியினர் மத்தியில் ப.குமார் பேசியபோது இதை கூறியுள்ளார்.

விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கடன் தள்ளுபடி அறிவிப்பால் யாருக்கு அதிக பலன் என்று ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்ளவது குறிப்பிடத் தக்கதாக உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: