வெள்ளை அறிக்கையா? சமாளிப்பு அறிக்கையா? - காந்திய மக்கள் இயக்கம் விமர்சனம்

மு.க.ஸ்டாலின்

தமிழ் நாட்டின் கடன் சுமையைப் பெருக்குவதில், இந்த இரண்டு கழகங்களின் இலவசத் திட்டங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை; மறைப்பதற்கில்லை.

 • Share this:
  வெள்ளை அறிக்கை வெளியீடு திமுக அரசுக்கு தற்போதைய இக்கட்டில் இருந்து தப்பிக்க இடைக்கால நிவாரணமாக, ஆறுதலாக அமையலாம் என காந்திய மக்கள் இயக்கம் விமர்சித்துள்ளது.

  காந்திய மக்கள் இயக்கம் மாநிலப் பொதுச் செயலாளர் பா. குமரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கை வரும் 9ஆம் தேதியும், நிதிநிலை அறிக்கை 13 ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 2011 ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'தமிழகத்தின் கடனாக, ஒரு லட்சம் கோடிக்கு மேல் திமுக விட்டுச் சென்றுள்ளது; தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 15 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது' என்று குறிப்பிட்டார். 2011 நிலைமை இப்படி என்றால் 2021 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் அவர்கள், கடன் தொகை 5 லட்சம் கோடி என்று தெரிவித்துள்ளார்.

  Also Read: "கைராசி மீது நம்பிக்கை இல்லை; உழைப்பை நம்புகிறேன்" - உதயநிதி ஸ்டாலின்

  2006 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி முடிவில் 56,094 கோடியாக இருந்த கடன் தொகை, 2011 இல் திமுக ஆட்சி முடிவுற்ற போது ஒரு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதனை, அடுத்த பத்தாண்டுகள் ஆண்ட அதிமுக 5 லட்சம் கோடியாக வளர்த்தெடுத்து உள்ளது. கடந்த கால அறிக்கைகளைத் தேடி எடுத்து ஆய்வு செய்து பார்த்தால், இரண்டு கழகங்களுக்கு இடையில் தமிழ்நாட்டின் கடனை அதிகரிப்பதில் ஒரு போட்டி இருப்பதாகவே தோன்றுகிறது. ஆட்சி முடிந்த பின் அடுத்து வருபவர்கள் வெளியிடும் அறிக்கைகள், இந்த இரண்டு கழகங்களின் ஆட்சியில் காட்சி மாறவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

  தமிழ் நாட்டின் கடன் சுமையைப் பெருக்குவதில், இந்த இரண்டு கழகங்களின் இலவசத் திட்டங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை; மறைப்பதற்கில்லை. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு வழி காட்டியவர் 'கலைஞர்' என்றால் அதில் வரலாறு படைத்தவர் 'புரட்சித் தலைவி' எனலாம். மின்விசிறி, அரவை இயந்திரம், மிக்சி என்று ஒவ்வொரு தேர்தலிலும் இலவசங்கள் அதிகரித்துக் கொண்டே போயின; இலவசமாக, இரு சக்கர தானியங்கி வாகனமும் கொடுத்தாகி விட்டதே. இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லாத சூழலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆல்ட்டோ கார் தான் தரவேண்டும். ஆனால், இப்போது உள்ள சூழலில் எரிபொருள் செலவுக்கு தினம் பணம் கொடுப்பவர்களே தேவை என்று தெரிகிறது.

  Also Read: முந்தைய ஆட்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய நிதியில் முறைகேடு!

  நிற்க இலவசங்களைத் தேவையானவர்களுக்கு ,தகுதியானவர்களுக்கு கொடுங்கள்;வாழ்வாதாரங்களை உயர்த்தி, மக்கள் சொந்தக் காலில் நின்றிட உதவும் இலவசங்களைத் தொடருங்கள். தரமான கல்வியை, சிறப்பான மருத்துவத்தை இலவசமாகத் தாருங்கள்; வேலைவாய்ப்புக்கான சூழலை உருவாக்குங்கள். இதை செய்தால் போதும்,  வேறு எந்த இலவசங்களும் வேண்டாம்.

  மகளிருக்கு இலவசப் பயணம் - மகிழ்ச்சி; ஆனால் அவற்றை ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கும், மாத வருமானம் 20,000 ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்துங்கள். இது போன்று, ஒவ்வொரு இலவசத் திட்டத்தையும் சீராய்வு செய்யுங்கள்; இதனை மேற்கொள்ளாமல், சகட்டுமேனிக்கு இலவசம் என்றால், இனி பொருளாதாரம் அதல பாதாளத்தில் தான் போய் நிற்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆண்டுக்காண்டு கடன் அதிகரிக்க, அரசு செலவினங்கள் வகைதொகை இன்றி செய்யப்படுவதும் மற்றொரு காரணமாகும். கொரோனா காலங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கு விழா எடுப்பது அவசியம்தானா? பத்தாண்டு காலம், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை சமூக நலக்கூடங்களில் பூட்டி வைத்தது சரிதானா? வணிகப் பயன்பாட்டில் இருந்த அரசுக் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய வளாகம் அமைக்க ஏற்படும் தாமதம் (ஓர் எடுத்துக்காட்டு - நந்தனம், அண்ணாசாலை வளாகம்) போன்ற வீண் செலவுகளையும், மந்தப் போக்கினால் விளையும் வருமான இழப்புகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

  பொறுப்பின்றி, வாய்க்கு வந்தபடி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சூழலில் இந்த வெள்ளை அறிக்கை வெளியீடு வேண்டுமானால், திமுக அரசுக்கு தற்போதைய இக்கட்டில் இருந்து தப்பிக்க இடைக்கால நிவாரணமாக, ஆறுதலாக அமையலாம். தொடர்ந்து இந்த நிலையை நீடிக்க விடாமல்,  ஒரு கழகம், இன்னொரு கழகம் மீது குறை கூறிக் கொண்டு இருப்பதை விட, அமைக்கப்பட்டு உள்ள சிறந்த பொருளாதார ஆலோசனைக் குழுவை சரியாகப் பயன்படுத்தி, தமிழகத்தை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டு எடுங்கள் என்று தமிழக முதல்வரையும், அறிவில் சிறந்த தமிழக நிதி அமைச்சரையும் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: