தமிழகத்தில் எந்தெந்த பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்?

கோப்பு படம்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார். அதன் பின்னர் கொரோனா நிவாரண தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பால் விலை குறைப்பு உள்ளட்ட 5 முக்கிய அரசாணைகளை அவர் பிறப்பித்துள்ளார்.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக இன்று காலை பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்களுக்கு பதவி பிராமணம் செய்யப்பட்டது.

  அதனைத்தொடர்ந்து, தலைமை செயலத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு முதல் கையெழுத்தாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுதிட்டுள்ளார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல்கட்டமாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதைத்தொடர்ந்துஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற கோப்பிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

  மேலும் மிக முக்கியமானதாக, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்ற கோப்பிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

  இதேபோல், மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

  தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

  சென்னையில் சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்து என வெவ்வேறு விதமான பேருந்துகள் ஓடுகின்றன.. இவற்றில் வெள்ளை போர்டு கொண்ட சாதாரண கட்டண பேருந்தில் மட்டுமே பெண்களுக்கு இலவசம். மற்ற பகுதிகளில், நகர பேருந்துகளில் மட்டுமே இலவசமாக பயணம் செய்யலாம்.. தொலைதூர பேருந்துகளில் இலவசம் கிடையாது.
  Published by:Vijay R
  First published: