தமிழ்நாட்டில் புதிதாக மதுக்கடைகளை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மறு ஆய்வு செய்வதை கட்டாயமாக்கி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் மதுக்கடைகளை திறக்கும் விஷயத்தில் மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிப்பது போல தோன்றினாலும், இது இனிப்பு கலக்கப்பட்ட நஞ்சு என்பது தான் உண்மை. மது வணிகத்தை அதிகரிக்க அரசு துடிப்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கிராமசபைகளுக்கு உண்டா? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும், பிற அமைப்புகளின் சார்பிலும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு பகுதியில் புதிய மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முயலும் போது, அதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம்; அதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்; அதன்மீது ஆட்சியர் முடிவெடுக்கும் வரை மதுக்கடைகளைத் திறக்க கூடாது. மாவட்ட ஆட்சியரின் முடிவில் உடன்பாடு இல்லை என்றால், அதை எதிர்த்து 30 நாட்களில் ஆயத்தீர்வை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்திருக்கிறது.
தமிழக அரசின் இந்த நிலைப்பாடு என்பது புதிய மதுக்கடைகளை திறப்பது தொடர்பானது. இதிலும் கூட மதுக்கடைகள் திறப்பதை தடுக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்படவில்லை; அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரம் மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. மாறாக, மதுக்கடைகள் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கும், ஆயத்தீர்வை ஆணையருக்கும் மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மக்களுக்கு எந்தவித ஜனநாயக உரிமையும் வழங்கப்பட்டு விடவில்லை. அதனால், தமிழ்நாட்டின் மதுவணிகச் சூழல் எந்த வகையிலும் மாறிவிடாது என்பது தான் உண்மையாகும்.
Read Also : தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வா? டிடிவி தினகரன் கண்டனம்
ஆனால், தமிழ்நாட்டின் இன்றைய தேவை புதிய மதுக் கடைகளைத் திறப்பது அல்ல... ஏற்கனவே திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடுவது தான். அதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. 2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் சில்லறை மது வணிகத்தைத் தொடங்கிய போது, தமிழ்நாட்டில் 7 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகள் இருந்தன. அடுத்த 14 ஆண்டுகளில் பா.ம.க. நடத்திய சட்டப்போராட்டம் - அரசியல் போராட்டங்களின் பயனாக ஆயிரத்திற்கும் கூடுதலான கடைகள் மூடப்பட்டன. அதனால், 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 6323 ஆக குறைந்தன. தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்கடைகள் தமிழகத்தில் மட்டும் மூடப்பட்டன.
அதனால், தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 3002 ஆக குறைந்தது. எனினும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, சாதகமான தீர்ப்பை பெற்று, மூடப்பட்ட கடைகளில் 2400 கடைகளை மீண்டும் திறந்தது. அதனால், தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5402 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால், மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் விருப்பமாகும். மதுவிலக்கு தொடர்பாக தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளிக்கவில்லை என்றாலும் கூட, தமிழகத்தின் முதலமைச்சரான பிறகு அளித்த ஒரு நேர்காணலில், தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைபடுத்துவதே தமது நோக்கம் என்றும், அதை படிப்படியாக செய்வோம் என்றும் அறிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் எண்ணம் இருந்தால் தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
Read Also : ‘நீட்’ தேர்வை ரத்து செய்து, அதிக மருத்துவக் கல்லூரிகளை இந்தியாவில் உருவாக்குவதே சரியான தீர்வு.. கி.வீரமணி
மாறாக, தமிழ்நாட்டில் புதிய மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு முயல்கிறது. புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதால் தான், தமிழக அரசு அதற்கான விதிகளை வகுத்திருக்கிறது. இல்லாவிட்டால், இனி புதிய மதுக்கடைகளை தமிழக அரசு திறக்காது; இருக்கும் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்திருக்க முடியும். அவ்வாறு செய்யாததன் மூலம் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிடுவதை அறிய முடியும். தமிழ்நாடு மதுவால் சீரழிந்து வரும் நிலையில், மேலும், மேலும் மதுக்கடைகளை திறப்பது தமிழகத்தையும், தமிழகத்தின் இளைய தலைமுறையினரையும் மீட்க முடியாத அளவுக்கு சீரழித்து விடும். அத்தகைய பாவத்தை தமிழக அரசு செய்து விடக் கூடாது. எனவே, புதிய மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட்டு, ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, DMK, MK Stalin, Pmk anbumani ramadoss, Tasmac