ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Rajendra Balaji : தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார்?

Rajendra Balaji : தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார்?

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji) வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

    3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. செல்போனையும் பயன்படுத்தாமல் தப்பி வரும் முன்னாள் அமைச்சர் எங்கே இருக்கிறார்?

    அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசி எப்போதும் லைம் லைட்டில் இருந்த ராஜேந்திர பாலாஜி, இப்போது மோசடி வழக்கில் தேடப்படும் நபராகி மீண்டும் லைம் லைட்டிற்கு வந்து விட்டார். விருதுநகரில் இருந்து எப்படித் தப்பித்தார்?அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. 'மோடி எங்கள் டாடி’ என்பது போன்று சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு சொந்தக்காரர் அமைச்சராக இருந்தபோது மஞ்சளாடை அணிந்தபடி கோயில்களுக்கு சென்று வழிபட்டு ஆன்மீகவாதியாகவும் புகழ் பெற்றார்.

    கையில் மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்களில் கயிறுகள் கட்டிக் கொண்டு தனது பக்தி உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான், ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டார் என விஜய நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி, அவரது தனிச் செயலாளர்கள், பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது புகாரளித்தார்

    புகாரின் மீதான விசாரணையில் முகாந்திரம் இருந்ததால், 4 பேர் மீதும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்து மனு மீதான விசாரணை டிசம்பர் 17ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அன்று தான், விருதுநகரில், திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருத்தங்கலில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 10 மணிக்கு தனது ஆதரவாளர்கள் பல கார்களில் பின்தொடர தனது காரில் விருதுநகருக்குப் புறப்பட்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மைக்கைப் பிடித்த நேரத்தில், அவரது முன்ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. சாதாரணமாக மேடையில் ஏறி மைக்கைப் பிடித்தால் மணிக்கணக்கில் பேசக் கூடிய ராஜேந்திர பாலாஜி, இந்தத் தகவலைக் கேட்ட உடன், 15 நிமிடங்களில் பேச்சை முடித்து விட்டார்.

    எப்போதும் மூன்று நான்கு கார்களில் ஆதரவாளர்களுடன் செல்லும் அவர், அன்று பேச்சை முடித்து விட்டுத் தனது காரில், தனியாக மதுரை நோக்கிப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. மதுரை நான்கு வழிச் சாலையில் திருமங்கலம் சுங்கச் சாவடி செல்லாமல், கள்ளிக்குடியில் இருந்து வாகனத்தை காட்டுப் பகுதி வழியாக திருப்பிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.

    காட்டுப் பகுதியில் பாதி வழியில் இறங்கிய ராஜேந்திர பாலாஜி, தனது வாகனத்தை வீட்டில் விட்டு விடும்படி ஓட்டுநரிடம் கூறி அனுப்பி விட்டார்.

    அங்கிருந்து வேறொரு சிறிய காரில், தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவிற்குச் சென்று தலைமறைவாகி விட்டதாக காவல்துறையில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.ஆனால், அவர் மதுரையில் இருந்து திருச்சி, சேலம் ஓசூர் வழியாக பெங்களூருவிற்கு சென்று தலைமறைவாகி விட்டார் என இன்னொரு தரப்பு காவல்துறையினர் கூறுகின்றனர்.

    மேலும் விருதுநகர் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் இதுவரை தனது செல்போனை அவர் பயன்படுத்தாததால், செல்போன் சிக்னல் வழியாகவும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பதில் போலீசாருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருடன் இருப்பவர்கள் என யூகிக்கப்படுபவர்கள், அவரது ஆதரவாளர்கள் என 600 பேரின் செல்போன் சிக்னல்களைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விமானம் மூலம் இந்தியாவிற்குள் ராஜேந்திர பாலாஜி எங்கும் தப்பிச் செல்லவில்லை என்பதையும் போலீசார் உறுதிப்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

    Also Read : சீனாவின் சியான் நகரில் முழு ஊரடங்கு: 1 கோடியே 30 லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்

    அதேநேரம், ராஜேந்திர பாலாஜி மட்டுமின்றி அவரது நான்கு தனிச் செயலர்களையும் இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளி நாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

    Read More : தமிழகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஒமைக்ரான்… தொற்று எந்த வேகத்தில் பரவும்? தீவிரம் எவ்வாறு இருக்கும்?- ஆய்வு சொல்லும் தகவல்

    ராஜேந்திரபாலாஜி வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி செய்தால் காவல் நிலையத்தற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒரு முன்னாள் அமைச்சர், மோசடி வழக்கில் சிக்கி போலீசாருக்குத் தண்ணி காட்டும் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Must Read : Omicron | மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவு

    ஐந்து நாட்களாக எங்கே இருக்கிறார் எனக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ராஜேந்திர பாலாஜி பதுங்கியிருப்பது தமிழக அரசியலிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்குவாரா? சரணடைவாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Rajendra balaji