தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கை: எப்போது வெளியீடு?

பழனிவேல் ராஜன்

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் வரும் 9ம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

  • Share this:
அ.தி.மு.கவின் 10 வருட ஆட்சிக் காலத்தில் நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாக அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின் போது நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மேற்கொண்டார். இதில் கடந்த 10 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை விவரம், கடன் சுமை மற்றும் அரசு செலுத்திய வட்டி தொடர்பான விவரம், ஜி.டி.பி, தனிநபர் வருமானத்தின் நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பிற மாநிலங்களில் நிதி நிலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கைகளை ஒப்பீடு செய்து, தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

2014ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தனது வருவாய் இலக்கை எட்டவில்லை. செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்ததால், வருவாய் பற்றாக்குறையும் ஏற்படத்தொடங்கியது தொடர்பாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்படலாம் என கூறப்படுகிறது.

வருவாய் இன்றி திட்டங்களை நிறைவேற்ற கடன்கள் வாங்கியதாலும், அந்த கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியாலும் ஆண்டுதோறும் செலவீனம் அதிகரித்து, பற்றாக்குறை நீடிப்பது குறித்தும் தகவல் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2011ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை 2020 - 21ம் நிதியாண்டில் 5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெள்ளை அறிக்கையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மற்றொருபுறம் ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய பிறகு மதிப்புக்கூட்டு வரி மூலம் அரசுக்கு நேரடியாக கிடைத்து வந்த வருவாய் இழப்பு குறித்தும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகொறது.

அந்த வகையில், 120 பக்கங்களைக் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில், கடன் விபரங்கள் மற்றும் சென்னை மெட்ரோ வாட்டர், மின்சார வாரியம், போக்குவரத்து, மருத்துவம், உள்ளாட்சி நிறுவனங்களின் வரவு செலவு திட்டம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது.
Published by:Karthick S
First published: